நம்மில் பலருக்கும் “பார்லி” என்றால் உடல் எடை குறைக்கும் உணவாகவே தெரியும். ஆனால், அது உங்கள் சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரியுமா..? மிதமான சுவை, வெண்மை நிறம், மென்மையான அமைப்பு இவை எல்லாம் பார்லியின் அடையாளங்கள்.
ஆனால், அதன் தோலுக்குள்ளேயே மறைந்திருக்கிறது ஒரு சக்திவாய்ந்த அழகு ரகசியம். சமையலறையில் சாதம் பதிலாக இடம் பிடித்த பார்லி, இப்போது உங்கள் ஃபேஸ்வாஷ், டோனர், பேஸ்மாஸ்க் மற்றும் ஹைட்ரேட்டிங் சீரமாக மாறுகிறது. பார்லியில் காணப்படும் செலீனியம், வைட்டமின் ஈ, பீட்டா குளுக்கன், பாலிபினால்கள் அனைத்தும் உங்கள் சருமத்திற்கு தேவையான மூலக்கூறுகளாக செயல்படுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடி, உங்கள் சருமத்தை இளமையுடன் பாதுகாக்க உதவுகின்றன.
மேலும், பார்லியின் இயற்கையான ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள், சீபம் சுரப்பை கட்டுப்படுத்துவதற்கும், பருக்கள் குறைவதற்கும் பெரும் காரணமாகின்றன. இதன் காரணமாக ஆயில் ஸ்கின் கொண்டவர்களுக்கு இது ஒரு இயற்கை தீர்வாக அமைகிறது.
* சிறிதளவு பார்லி மாவில் தேன் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட் தயாரிக்கவும். இதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து கழுவினால், இது உங்கள் முகத்தை குளிர்ச்சியாகவும், சுத்தமாகவும் மாற்றும்.
* பார்லியை கொதிக்க வைத்து, வடிகட்டிய பின் சூடு குறைந்ததும், அந்த நீரை முகத்தில் தடவி விடுங்கள். பெரிய ஸ்கின் போர்ஸ்களை சிறிதாக்க இது உதவும். கூடுதல் வசதிக்கு, ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி நேரடியாக முகத்தில் தெளிக்கலாம்.
* 2 ஸ்பூன் பார்லி மாவுடன் 1 ஸ்பூன் தயிர், சிறிது தேன் கலந்து, சற்று பால் சேர்த்தும் பயன்படுத்தலாம் (டிரை ஸ்கின் உள்ளவர்கள்). முகத்தில் 15-20 நிமிடங்கள் ஊறவிட்ட பின் கழுவினால், உங்கள் சருமம் நன்கு பளிச்சென்று மாறும்.



