ஆரோக்கியமான வாழ்விற்கு கால்சியம் சத்து எவ்வளவு அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதில் சவால்களை சந்திக்க நேரிடும். அத்தகைய குறைபாடுகளை களைந்து, எலும்புகளை வலுவாக்க சில எளிய காலை உணவு மாற்றங்களை செய்தாலே போதும்.
செறிவூட்டப்பட்ட பால் மற்றும் பானங்கள் :
சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் அளவைச் சீராக வைத்திருக்கச் செறிவூட்டப்பட்ட (Fortified) உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். அவசரமான காலை வேளைகளில், ஊட்டச்சத்துக்கள் நிரப்பப்பட்ட இத்தகைய செறிவூட்டப்பட்ட பாலைக் குடிப்பது, நாள் முழுவதும் உங்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, அத்தியாவசிய சத்துக் குறைபாடுகளையும் போக்க உதவும்.
புரதம் நிறைந்த ஸ்மூத்திகள் :
நேரம் குறைவாக இருப்பவர்களுக்கு ‘ஸ்மூத்திகள்’ ஒரு வரப்பிரசாதம். பாதாம் பாலுடன் எள் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஸ்மூத்தி, கால்சியம் சத்தின் களஞ்சியமாகத் திகழ்கிறது. இதனுடன் சியா விதைகள், பூசணி அல்லது சூரியகாந்தி விதைகளைச் சேர்க்கும்போது, அது கூடுதல் சுவையையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவுவதால், தேவையற்ற நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கலாம்.
பாரம்பரிய ராகி மற்றும் சாலட் வகைகள் :
தானியங்களில் ராகிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. கால்சியம் அதிகம் நிறைந்த ராகியைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தோசை, சுவையான மற்றும் சத்தான காலை உணவாக அமையும். அதேபோல், மதிய வேளைகளிலோ அல்லது நள்ளிரவு பசியின் போதோ, முளைத்த தானியங்களைக் கொண்டு ஒரு சாலட் தயார் செய்யலாம். அதில் செர்ரி தக்காளி மற்றும் ஆலிவ் பழங்களைச் சேர்ப்பதன் மூலம், புரதமும் கால்சியமும் சம அளவில் உடலுக்குக் கிடைக்கும்.
சோயா மற்றும் கீரை :
கால்சியம் மற்றும் புரதம் ஆகிய இரண்டையும் ஒரே உணவில் பெற விரும்புபவர்களுக்குச் சோயா தயிர் மற்றும் கீரை ஒரு சிறந்த கலவையாகும். குறிப்பாகத் டோஃபு (Tofu) மற்றும் கீரையைச் சேர்த்துப் பொரியல் அல்லது புர்ஜி போலச் செய்து காலை உணவாக உட்கொள்வது, தசை வளர்ச்சிக்கும் எலும்பு உறுதிக்கும் பேருதவியாக இருக்கும்.
Read More : “தனித்துப் போட்டியிட தைரியம் இருக்கா”..? பிரேமலதா விஜயகாந்துக்கு சவால் விட்ட ப்ளூ சட்டை மாறன்..!!



