ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் மனநலனின் முக்கிய அங்கமாக பாலியல் ஆரோக்கியம் திகழ்கிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டும் செப்.4-ஆம் தேதியை உலக பாலியல் சுகாதார தினமாக அனுசரித்து, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதிகப்படியான அலைபேசி பயன்பாடு, சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுதல் போன்ற நவீன வாழ்க்கை முறை பழக்கங்கள், மன அழுத்தத்தை அதிகரித்து, பாலியல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, மன அழுத்தத்தைக் குறைத்து பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில பயனுள்ள குறிப்புகளைக் காணலாம்.
ஆரோக்கியமான உணவு முறை : உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுச் சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேவையான அளவில் எடுத்துக்கொள்வது மன அழுத்தத்தைப் பராமரிக்க உதவும். குறிப்பாக, வைட்டமின் சி, ஈ, டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், ஆரோக்கியமான பாலியல் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலையும் மனநிலையையும் தக்கவைக்க உதவும்.
யோகா மற்றும் தியானம் : தினமும் யோகா பயிற்சிகளை மேற்கொள்வது மன அழுத்தத்தைக் குறைத்து, உடலையும் மனதையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மன அழுத்தம், பதற்றம் மற்றும் கவலை உணர்வுகள் குறையும்போது பாலியல் ஆசை (லிபிடோ) அதிகரிக்கிறது.
ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மற்றும் தியானம் செய்வது, Parasympathetic நரம்பு மண்டலத்தைத் தூண்டி, பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், வாழ்க்கையை அமைதியாக நடத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
தூக்கம் : ஆழ்ந்த தூக்கம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மிக முக்கியமானது. சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொந்தரவு இல்லாத உறக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவும். தூக்கமின்மை நேரடியாகப் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும். மேலும், தனிமை உணர்வுடன் இருப்பது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
எனவே, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போதுமான நேரம் செலவிடுதல், சமூக ஆதரவு அமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை மன அழுத்தத்தை குறைத்து, துணையுடன் பாலியல் தேவைகளைப் பற்றிப் பேசத் தேவையான தைரியத்தையும் அளிக்கும்.