முதலில் மைண்ட்ஃபுல் ஈட்டிங் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு உணவை வெறுமனே வாயில் போட்டு மெல்லாமல் அதனை ரசித்து, பொறுமையாக கூழாக்கி விழுங்குவதே மைண்ட்ஃபுல் ஈட்டிங் ஆகும். அது நாம் என்ன உணவை சாப்பிடுகிறோம் என்பதிலும் கவனம் செலுத்துவதையும் குறிக்கும். இதில் கலோரி கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. மாறாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களில் இருந்து விலகி, சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
எப்பொழுதும் கலோரிகளை எப்படி குறைப்பது என்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு நல்ல முடிவுகளை தரும். இப்பொழுது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
குக்கிகள் மற்றும் கேக்: முழுக்க முழுக்க சர்க்கரை மற்றும் அதிக கலோரிகள் இருக்கும் குக்கி மற்றும் கேக்குகளை சாப்பிட்ட உடனேயே உங்களுக்கு பசி எடுக்க ஆரம்பித்து விடும். மேலும், இந்த இரண்டிலுமே கலோரிகள் அதிகமாக இருப்பதால், எடை குறைக்கும் முயற்சியில் நிச்சயமாக தடையை ஏற்படுத்தும்.
மது பானங்கள் : பொதுவாக மதுபானங்கள் குடிப்பது உடல் எடையை அதிகரிக்க செய்யும். குறிப்பாக, பீர் குடிப்பவர்களுக்கு இது பொருந்தும். அதில் அதிக கலோரி காரணமாக எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு மோசமான பானமாக அமைகிறது. எனினும், இதனை அளவாக குடிப்பது நல்லது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ஒயின் போன்ற ஒரு சில வகை மதுபானங்களை குறைந்த அளவில் குடிப்பது, பாசிட்டிவான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன.
சோடா மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் : சோடா, கார்பனேடட் பானங்கள், பாக்கெட்டில் வரும் குளிர்பானங்கள் உள்ளிட்டவை அதிக சர்க்கரையைக் கொண்டுள்ளன. இவ்வாறு அதிக சர்க்கரை இருக்கும் பானங்களை அதிகளவு குடிப்பது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அதிக சர்க்கரை இருக்கும் உணவுகள் அல்லது பானங்களை சாப்பிடும் பொழுது அவை வயிறு நிரம்பியது போன்ற உணர்வை அளிக்காமல், இன்னும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தூண்டுவதன் மூலமாக நம்மை அதிகப்படியாக சாப்பிட வைக்கிறது . இதனால் உடல் எடை அதிகரிக்கும். ஆகவே சர்க்கரை அல்லது இனிப்புகள், பானங்கள் ஆகியவற்றை எந்த அளவுக்கு சாப்பிடுகிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
ஃபிரென்ச் ஃபிரைஸ் : பலருக்கும் ஃபேவரெட் ஸ்நாக்ஸ் ஆன ஃபிரென்ச் ஃபிரைஸில் அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். ஆகவே, ஃபிரென்ச் ஃபிரைஸ் மற்றும் உருளை சிப்ஸ் போன்ற பொறித்த உணவுகளை, சிப்ஸ் வகைகளை குறைவாக சாப்பிட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு பொட்டேட்டோ சிப்ஸ் சாப்பிட வேண்டும் போல இருக்கும் பொழுது, ஏர் ஃபிரை அல்லது பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை சாப்பிடலாம்.
பீட்சா : பீட்சாவும் அனைத்து வயதினர் மத்தியிலும் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு உணவாக மாறிவிட்டது. கடைகளில் விற்கப்படும் பீட்சாக்கள் சுத்திகரிக்கப்பட்ட மாவு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றால் ஆனவை. இதனை சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கக்கூடும். உங்களுக்கு பீட்சா சாப்பிட வேண்டும் போல இருக்கும் பொழுது, அதனை ஆரோக்கியமான முறையில் வீட்டிலே செய்து சாப்பிடுவது சிறந்தது. பீட்சா செய்யும் பொழுது சேர்க்கப்படும் பொருட்கள் மற்றும் டாப்பிங்கள் போன்றவற்றில் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சேர்த்து செய்யுங்கள். உதாரணமாக முழு தானியங்கள், ஃபிரஷ்ஷான காய்கறிகள், மெலிந்த புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சேர்த்து பீட்சா செய்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகள் ஏற்படுத்தாது.