ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் சிறப்பு பெற்றிருந்தாலும், சில குறிப்பிட்ட நாட்களில் மேற்கொள்ளப்படும் எளிய வழிபாடுகள் கூட நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றியமைக்கும் சக்தி கொண்டவை. அத்தகையதொரு அதிவிசேஷமான, தவறவிடக்கூடாத ஒரு நாள் தான் நவம்பர் 3.11.2025. இந்த நாளில் முறையாக விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால், வாழ்க்கையில் உள்ள அத்தனை விதமான பிரச்சனைகளில் இருந்தும் நிரந்தரமாக விடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.
நவம்பர் 3ஆம் தேதி என்ன சிறப்பு..?
அன்றைய தினம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததான சோமவாரப் பிரதோஷம் வருகிறது. இந்த ஆண்டு, அதுவும் ஐப்பசி மாதத்தில் வரும் சோமவாரப் பிரதோஷம் இது. மேலும், ஐப்பசி பௌர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்துக்கு முன்பு வரும் சோமவாரப் பிரதோஷம் என்பதால், இது கூடுதல் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.
அதுமட்டுமின்றி, நவம்பர் 3ஆம் தேதி பிரதோஷ வேளையில் ரேவதி நட்சத்திரமும் அமைந்துள்ளது ஒரு சிறப்பம்சமாகும். ரேவதி நட்சத்திரத்தில் செய்யப்படும் சிவ வழிபாடு, நம்முடைய பாவங்கள், துன்பங்கள் அனைத்தையும் போக்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களையும், கோடீஸ்வர யோகத்தையும் தரக்கூடிய ஆற்றல் கொண்டது என்பது ஐதீகம்.
மன நிம்மதிக்கு வழி தரும் சோமவார விரதம் :
சிவபெருமானுக்குரிய பிரதோஷ வழிபாடுகளில், சனிக்கிழமையில் வரும் சனிப் பிரதோஷத்துக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்புமிக்கது சோமவாரப் பிரதோஷம் ஆகும். ‘சோமன்’ என்பது சந்திரனை குறிக்கும். சிவபெருமானின் தலையில் அமர்ந்து சூடிக் கொள்ளும் பெரும் பாக்கியத்தைப் பெற்ற சந்திரன், திங்கட்கிழமைக்கு உரிய கிரகம் ஆவார். எனவே, திங்கட்கிழமையில் வரும் பிரதோஷமே சோமவாரப் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
சோதிட சாஸ்திரத்தின்படி, சந்திர பகவான்தான் மனதிற்கு காரகனாவார். ஒருவருக்கு மனக்குழப்பம், சஞ்சலம், மன வேதனை, நிம்மதியின்மை, மன அழுத்தம் ஆகியவை ஏற்படுவதற்கு சந்திரன் காரணமாக இருக்கலாம். எனவே, குடும்பத்திலும் வாழ்க்கையிலும் நிம்மதி இல்லாமல், எப்போதும் பிரச்சனைகளுடன் தவிப்பவர்கள், அவற்றில் இருந்து விடுபட்டு, நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவதற்கு இந்த சோமவாரப் பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் விசேஷமானது.
பிரதோஷ வழிபாட்டு முறை :
நவம்பர் 3ஆம் தேதி வரும் இந்தச் சிறப்புமிக்க சோமவாரப் பிரதோஷத்தன்று, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரதோஷ வேளையில் சிவபெருமானின் சுவாசமாக கருதப்படும் நந்தி பகவானுக்கு நடைபெறும் அபிஷேகத்திற்காக பால், தயிர், தேன் போன்ற அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது அவசியம். மேலும், அவருக்கு அருகம்புல் மாலை அல்லது அருகம்புல் சாற்றி வழிபட வேண்டும்.
அன்றைய தினம் காலை முதல் மௌன விரதம் இருந்து, ‘ஓம் நம சிவாய’ எனும் மந்திரத்தை மனதிற்குள்ளேயே ஜெபித்தபடி இருப்பது மிகுந்த பலனைத் தரும். பிரதோஷ வேளையில் சிவாலயத்தில் சிவபெருமானையும், நந்தி பகவானையும் மனதார வேண்டி, உங்களுடைய அனைத்துவிதமான துன்பங்கள், மன வேதனைகள், வேண்டுதல்கள் ஆகியவற்றைப் பற்றி முறையிட்டால், அவை விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சோமவாரப் பிரதோஷத்தில் செய்யப்படும் இந்தச் சிவ வழிபாடு, சிவபெருமானின் மனதைக் குளிர செய்து, உங்கள் வாழ்க்கையில் பெரும் நன்மைகளை தர வல்லது.
Read More : மகிழ்ச்சி…! வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 காசு குறைப்பு…!



