கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இந்த நேரத்தில், தாயின் ஆரோக்கியமான உணவுப் பழக்கம், குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு மிக அவசியம். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் பரவும் பல தவறான தகவல்களை நம்பி, கர்ப்பிணி பெண்கள் வினோதமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுகின்றனர்.
அவற்றில் மிக முக்கியமானது, ‘கர்ப்ப காலத்தில் இளநீர் குடித்தால் பிறக்கும் குழந்தை அழகாகவும், வெண்மையாகவும் இருக்கும்’ என்ற நம்பிக்கை. இந்தப் பொய்யான தகவலை நம்பிப் பல கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவில் இளநீரை உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இளநீர் உண்மையில் குழந்தையின் நிறத்தை மாற்றுமா என்பது குறித்து சுகாதார நிபுணர்களின் கருத்து என்னவென்று பார்ப்போம்.
குழந்தையின் நிறத்தை நிர்ணயிப்பது எது..?
சுகாதார நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒரு குழந்தையின் தோலின் நிறம் முற்றிலும் பெற்றோரின் மரபணுப் பண்புகளையே சார்ந்தது. குழந்தையின் உடலில் உள்ள ‘மெலனின்’ என்ற நிறமியின் அளவே, குழந்தையின் சருமம் வெண்மையாகவோ அல்லது கருமையாகவோ இருக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது. உடலில் மெலனின் அளவு அதிகமாக இருந்தால் கருமையான சருமமும், குறைவாக இருந்தால் வெண்மையான சருமமும் அமையும்.
எனவே, நீங்கள் கர்ப்ப காலத்தில் எவ்வளவு இளநீர் குடித்தாலும், குங்குமப்பூ பால் உட்கொண்டாலும் அல்லது தேங்காய் சாப்பிட்டாலும், அது குழந்தையின் நிறத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இளநீர் குடிப்பதால் குழந்தையின் நிறம் மாறும் என்பதற்கு எந்த மருத்துவ அல்லது அறிவியல் ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர். சமூக ஊடகங்களில் வரும் இதுபோன்ற வீடியோக்கள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் மட்டுமே.
இளநீரின் உண்மையான ஆரோக்கியப் பலன்கள் :
இளநீர் குழந்தையின் நிறத்தை மாற்றாவிட்டாலும், அது கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இளநீரில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், ஆற்றலை வழங்கவும், செரிமானத்தைச் சீராக்கவும் உதவுகின்றன. மேலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிகச் சூடு, வாந்தி மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் இளநீர் அருமருந்தாக செயல்படும்.
எச்சரிக்கை :
சர்க்கரை நோய் (நீரிழிவு) மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், இளநீரில் உள்ள இயற்கையான சர்க்கரை மற்றும் பொட்டாசியம் அளவு காரணமாக, கட்டாயம் மருத்துவரை அணுகிய பின்னரே இளநீரை குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
Read More : வீட்டில் வறுமையை போக்கி செல்வத்தை சேர்க்கும் 7 வாஸ்து ரகசியங்கள்..!! இந்த பொருட்கள் இருந்தாலே போதும்..!!



