“இத்தனை முறை கோவிலுக்கு சென்றும், இவ்வளவு பிரார்த்தனை செய்தும் என் கஷ்டங்கள் தீரவில்லையே ஏன்?” என்ற கேள்வி பலருடைய மனதிலும் ஒரு தீராத குறையாகவே இருந்து வருகிறது. ஒருவருக்கு வேண்டியது உடனடியாக கிடைப்பதும், மற்றொருவர் எத்தனை போராடினாலும் தடைகள் நீடிப்பதும் எதனால்? இதற்குப் பின்னால் பெரிய ஆன்மிக ரகசியங்கள் எதுவும் இல்லை; நாம் வழிபடும் முறை, அப்போது நமக்குள் இருக்கும் மனநிலை மற்றும் நாம் இறைவனிடம் வைக்கும் நம்பிக்கையின் ஆழம் ஆகியவையே இதற்குக் காரணமாக அமைகின்றன. முதலில் நாம் கோவிலுக்குச் செல்வது என்பது ஒரு சடங்கு அல்ல, அது நம் மனதை சீரமைக்கும் ஒரு ஆன்மிக ஒழுங்கு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பலர் கோவிலுக்குள் நுழைந்தவுடனேயே, “எனக்கு இது கிடைக்கவில்லை, என் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம்” என்று தங்களின் குறைகளை பட்டியலிட தொடங்கிவிடுகிறார்கள். குறைகளைச் சொல்வதில் தவறில்லை, ஆனால் அந்த எதிர்மறை உணர்விலேயே உறைந்து நின்று வேண்டுவதுதான் தவறு. இதற்கு ஒரு சிறந்த உதாரணம், ஒரு பெண் தினமும் கோவிலுக்குச் சென்று தன் வறுமையைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் அந்தப் பூசாரி அவளிடம், “நீ தினமும் உன்னிடம் எது இல்லையோ அதைச் சொல்லித்தான் பிரார்த்திக்கிறாய். நீ எதைச் சொல்கிறாயோ அதையே பிரபஞ்சம் உனக்குத் திருப்பித் தரும்” என்றார். அன்றிலிருந்து அந்தப் பெண், “இறைவா, நீ எனக்கு நல்ல வாழ்வை தருவாய், எனக்கு அமைதி கிடைக்கும்” என்று நம்பிக்கையோடு வேண்ட தொடங்கினாள். சில காலத்திலேயே அவளது மனநிலையும், அதன் தொடர்ச்சியாக அவளது வாழ்க்கையும் மாற தொடங்கியது.
சரியான வழிபாட்டு முறை எது..?
கோவிலுக்குச் சென்றால் முதலில் மனதை அமைதிப்படுத்துங்கள். சன்னதியில் இறைவனைக் கண்ணார தரிசித்து, அவனது நாமத்தை மனதார உச்சரியுங்கள். பிரகாரத்தை வலம் வந்து, கொடி மரத்தின் முன் பணிந்து வணங்குங்கள். பின்னர் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து மனதிற்குள் உரையாடுங்கள். அந்த அமைதியில் பிறக்கும் பிரார்த்தனைக்குத்தான் அதிக வலிமை உண்டு. “எனக்கு இதைக்கொடு” என்று கட்டளையிடுவதை விட, “எனக்கு எது நல்லதோ அதை செய்” என்று முழுமையாக ஒப்படைக்கும்போது, அங்கே பாசிட்டிவ் எனர்ஜி பிறக்கிறது.
நன்றி சொல்லும் பண்பு :
நம்பிக்கை உறுதி, மன அமைதி மற்றும் செயலில் முயற்சி இவை மூன்றுமே வேண்டுதல்கள் நிறைவேற முக்கியமான காரணிகள். எப்போதுமே பிறருக்கு தீங்கு நினைக்காத தூய்மையான மனதுடன் இருங்கள். இதுவரை கிடைத்தவற்றுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கிடைக்காததை எண்ணி வருந்துவதை விட, கிடைத்திருப்பதை மதிக்க தொடங்கினால், அங்கே இறையருள் தானாக தங்கி நிற்கும். நாம் நேர்மறையான எண்ணங்களை வளர்க்க தொடங்கும்போது, நமக்கு தேவையானவற்றை இந்தப் பிரபஞ்சம் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
Read More : கிரெடிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு..! ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்..! 5 முக்கிய மாற்றங்கள் அமல்..!



