கர்நாடக மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யப்பா லே-அவுட்டில் வசித்து வந்த பிரபல தோல் நோய் மருத்துவர் கிருத்திகா, மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் டாக்டர் மகேந்திரா 6 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கிருத்திகாவும், அவரது கணவர் மகேந்திராவும் மருத்துவர்கள்.
அறுவை சிகிச்சை நிபுணரான மகேந்திரா, கர்நாடகாவின் உடுப்பி, மணிப்பாலைச் சேர்ந்தவர் மற்றும் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் பணிபுரிபவர். கடந்த 2024, மே 26-ஆம் தேதி இவர்களுக்குத் திருமணம் நடந்தது. திருமணமான புதிதில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி கிருத்திகா தனது அறையில் பேச்சு மூச்சற்று கிடந்தார். குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மகேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் உடலை உடற்கூறு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறிய நிலையில், ரேடியோலாஜி மருத்துவரான கிருத்திகாவின் சகோதரி நிகிதா ரெட்டி வலியுறுத்தியதன் பேரில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறிக்கை வெளியாகி 6 மாதங்களுக்குப் பிறகு, மனைவி கிருத்திகாவுக்கு அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்து கொலை செய்ததாக கூறி, கணவர் மகேந்திராவை மாரத்தஹள்ளி போலீசார் நேற்று கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உடல்நலப் பிரச்சனைகளை மறைத்துத் திருமணம் செய்ததாகக் கூறி மகேந்திரா இந்த கொலையைச் செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகேந்திராவை 9 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
இந்த வழக்கில் தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கிருத்திகா இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு இரைப்பை அழற்சி பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அறுவை சிகிச்சை நிபுணரான கணவர் மகேந்திரா அவரே சிகிச்சை அளித்து, நரம்பு வழியாக (IV) மருந்து செலுத்தியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23-ஆம் தேதி மதியம், அதிக வலியை உணர்ந்த கிருத்திகா, ஐ.வி. சொட்டு மருந்தை அகற்றலாமா என்று வாட்ஸ்அப் மூலம் கணவருக்கு செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், மகேந்திரா அதனை மறுத்து மீண்டும் மருந்து வழங்க வேண்டும் என்று கூறியதாகவும், இதனால் கிருத்திகா வலியால் துடித்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வக அறிக்கை (FSL) ஆகியவற்றின் மூலம், தடை செய்யப்பட்ட மயக்க மருந்தான ‘புரோபோஃபோல்’ (Propofol) அவருக்குச் செலுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருத்திகாவின் தந்தை முனி ரெட்டி அளித்த புகாரின் பேரில், முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. “என் மகள் தன் கணவரையும் அவரது மருத்துவத் தொழிலையும் முழுமையாக நம்பினாள். அவர் தன் மருத்துவ அறிவைப் பயன்படுத்தி என் மகள் உயிரைக் காப்பதற்குப் பதில் கொன்றுவிட்டார். இதில் திட்டமிட்ட சதி உள்ளது. என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று கண்ணீருடன் முனி ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.