காற்று மாசு, வெப்ப அலைகள் மற்றும் காலநிலை மாற்றம் அதிகரித்து வரும் இந்த உலகில், புதிய மறைமுகப் பாதிப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.. அது ஆண்களின் மலட்டுத்தன்மை (Male Fertility Decline) ஆகும்.
கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய ஆய்வுகள் தொடர்ந்து விந்து கணக்கிலும் தரத்திலும் (sperm count & quality) கடுமையான வீழ்ச்சியை காட்டுகின்றன. இது ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த பெரும் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது.
வாழ்க்கை முறைகள், போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவு, அதிக எடை (obesity), புகைப்பிடித்தல், மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்களாக அறியப்பட்டாலும், நிபுணர்கள் தற்போது சுற்றுச்சூழல் காரணிகள் குறிப்பாக காற்று மாசு மற்றும் வெப்பம் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றன என எச்சரிக்கின்றனர்.
“ஆண்களின் பிள்ளைப் பெறும் திறன் என்பது தனிப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல; அது நமது பூமியின் ஆரோக்கியத்தைக் காட்டும் ஒரு அடையாளம்,” என்கிறார் ஃபோர்டிஸ் மருத்துவமனை மருத்துவ டாக்டர் நிதி கௌதிஷ்.. மேலும் “உலகம் சூடாகி நகரமயமாகி வரும் நிலையில், இந்த மறைந்து வரும் அபாயங்களை உணர்ந்து, அதை சமாளிப்பது எதிர்கால தலைமுறைகளின் உயிர்வாழ்விற்குத் தேவையானது.” என்றும் அவர் தெரிவித்தார்..
மாசும் ஆண்களின் இனப்பெருக்கமும்
இந்தியாவில், காற்று மாசு ஏற்கனவே ஒரு பொது சுகாதார நெருக்கடி எனக் கருதப்படுகிறது. இதுவரை அது மூச்சு மற்றும் இதய நோய்களுக்கு காரணமாகக் காணப்பட்டது; ஆனால் அது ஆண்களின் இனப்பெருக்கத்தையும் பாதிக்கக்கூடும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டாக்டர் நிதி கௌதிஷ் பேசிய போது “முக்கியமாக PM2.5 என்ற நுண்ணிய தூசி துகள்களும், நைட்ரஜன் டையாக்சைடு (NO₂) போன்ற நச்சு வாயுக்களும் விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கத்தைக் குறைக்கின்றன,” என்று தெரிவித்தார்..
இந்த துகள்கள் மூச்சுடன் உடலுக்குள் சென்று இரத்த ஓட்டத்தில் கலந்து, ஆக்சிடேட்டிவ் ஸ்டிரெஸ் (oxidative stress) உருவாக்குகின்றன. இதனால் வீரிய DNA சேதம் மற்றும் ஹார்மோன் ஒழுங்குமுறை பாதிப்பு ஏற்படுகிறது. 2022ல் Environmental Health Perspectives இதழில் வெளியான ஆய்வின்படி, அதிக PM2.5 மாசு நிலைக்கு உட்பட்டவர்கள் வீரிய இயக்கத்தில் குறிப்பிடத்தக்க குறைவு கண்டறியப்பட்டது. சீனாவிலும் இத்தாலியிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டியபடி, மாசு மிகுந்த நகரங்களில் வாழும் ஆண்களின் வீரியத் தரம் கிராமப்புற ஆண்களைவிட 15–25% குறைவாக இருந்தது.
குறுகிய கால மாசு வெளிப்பாடே கூட விந்தணுவின் வடிவம், DNA அமைப்பு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வெப்பம் — ஆண்களின் இனப்பெருக்கத்திற்கு மறைமுக எதிரி
“விரைப்பைகள் (testes) உடலின் வெளிப்புறத்தில் இருப்பதற்குக் காரணம், அவை உடலின் சாதாரண வெப்பத்தைக் காட்டிலும் சிறிது குறைந்த வெப்பத்தில் சிறப்பாக இயங்குகின்றன,” என்கிறார் டாக்டர் கௌதிஷ். ஆனால், உலக வெப்பமயமாதல், வெப்பம் அதிகமான தொழில்கள், அல்லது அதிக இறுக்கமான உடைகள் விரைபை வெப்பத்தைக் கூட்டுகின்றன. இதனால் விந்தணு உற்பத்தி குறைவு ஏற்படுகிறது.
Journal of Thermal Biology வெளியிட்ட ஆய்வுகள் காட்டியபடி, விரைப்பை வெப்பம் வெறும் 1°C உயர்ந்தாலும், விந்தணு உற்பத்தி மற்றும் இயக்கம் 40% வரை குறையலாம். தொழிற்சாலைகள், கட்டுமான தளங்கள், உலோக உற்பத்தி நிலையங்கள் போன்ற வெப்பம் அதிகமான பணியிடங்களில் பணிபுரியும் ஆண்கள் மிகுந்த ஆபத்தில் உள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்ததன்படி, 2024 இல் இந்தியா முழுவதும் 45°Cக்கு மேற்பட்ட வெப்ப அலைகள் அதிகரித்தன. “இத்தகைய சூழல்கள் இனி அரிதானவை அல்ல,” என எச்சரிக்கிறார் டாக்டர் கௌதிஷ். “தொடர்ச்சியான வெப்ப வெளிப்பாடு விந்தணு DNA-ஐ சேதப்படுத்தி, நீண்டகாலத்தில் பிள்ளைப் பெறும் திறனை குறைக்கிறது.” என்று தெரிவித்தார்..
மாசு + வெப்பம் — இரட்டைக் கடுமை
“மாசு மற்றும் வெப்பம் இணைந்த தாக்கம் மிக ஆபத்தானது,” என்கிறார் டாக்டர் கௌதிஷ். “நகரங்கள் சூடாகி, காற்று தரம் குறைந்தபோது, ஆண்களின் இனப்பெருக்க திறனை மட்டுமல்ல, எதிர்கால மக்கள் ஆரோக்கியத்தையும் இது அச்சுறுத்துகிறது.” என்று தெரிவித்தார்..
2023-ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) நடத்திய ஆய்வில், மாசும் வெப்ப அழுத்தமும் நீண்டகாலம் சந்திக்கும் ஆண்களில் விந்தணு DNA சேதம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை அதிகமாக இருப்பது தெரியவந்தது. மேலும், உணவு குறைவு, தண்ணீர் இழப்பு, தூக்கமின்மை, மனஅழுத்தம் ஆகியவை இந்த தாக்கங்களை மேலும் தீவிரப்படுத்துகின்றன. நிபுணர்கள் இதை “சுற்றுச்சூழல் காரணமான இனப்பெருக்கச் சுழல் (Environmental Infertility Loop)” என அழைக்கின்றனர்.
ஆண்களின் பிள்ளைத் திறனைப் பாதுகாக்குவது எப்படி?
டாக்டர் கௌதிஷ் பரிந்துரைகள்:
- அதிக வெப்ப சூழலில் நீண்ட நேரம் இருக்காமல் தவிர்க்கவும்
- தளர்வான, காற்றோட்டமான உடைகளை அணியவும்
- வெளியிலோ, வெப்ப தொழில்களிலோ பணிபுரியும் போது அடிக்கடி ஓய்வு எடுக்கவும்
- புகைப்பிடித்தல் மற்றும் அதிக மது அருந்தலைத் தவிர்க்கவும்
- பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், விதைகள் போன்ற ஆன்டி-ஆக்சிடண்ட் நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும்
மிகப் பெரிய நடவடிக்கைக்கு அழைப்பு
“ஆண்களின் பிள்ளைத் திறனைப் பாதுகாப்பது தனிநபர் பொறுப்பு மட்டுமல்ல, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கையும் அவசியம்,” என்கிறார் டாக்டர் கௌதிஷ். அரசுகள் காற்று தரக் கட்டுப்பாடுகள், பசுமை வடிவமைப்புகள் (green rooftops) மற்றும் வெப்பக் கட்டுப்பாடு கொண்ட நகர அமைப்புகள் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்..
ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அவசியம். “உலகம் தொடர்ந்து சூடாகி நகரமயமாவதால், இந்த மறைந்து வரும் அபாயங்களை கவனித்து செயல்படுவது எதிர்கால தலைமுறைகளின் வாழ்விற்கு முக்கியமானது,” என முடிக்கிறார் டாக்டர் கௌதிஷ்.



