பெரும்பாலான வீடுகளில் காணப்படும் ஒரு வழக்கமான பழக்கம்தான், அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்துவது. குடும்ப உறுப்பினர்கள் என்பதற்காக ஒரே சோப்பை பகிர்ந்து கொள்வதில் பாதிப்பு இருக்காது என நினைப்பது வழக்கம். ஆனால், இது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாறும்.
ஒவ்வொருவருக்கும் சரும அமைப்பு வித்தியாசமானது. ஒருவருக்கு ஏற்கனவே உள்ள சருமம் தொடர்பான தொற்றுகள், மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, பலர் ஒரே சோப்பைப் பயன்படுத்தும்போது, அந்த சோப்பை பயன்படுத்திய பின் நன்றாக கழுவாமல், ஈரமாகவே வைத்துவிடுவது வைத்து விடுவார்கள். அப்போது சோப்பில் கிருமிகள் பரவுவதற்கும், பெருகுவதற்கும் வாய்ப்பு உண்டு.
சிலர் தோலில் புண், அலர்ஜி, எக்ஸிமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் பயன்படுத்திய சோப்பை மற்றவர்கள் நேரடியாக பயன்படுத்தும்போது, அந்த நுண்ணுயிரிகள் உங்களுக்கும் பரவ வாய்ப்பு அதிகம். இதில் பாக்டீரியா, வைரஸ், பங்கஸ் போன்ற தொற்றுகள் அடங்கும். ஆரோக்கியமான தோல் அமைப்பை கொண்டவர்கள் அதிக பாதிப்பின்றி இருக்கக்கூடிய சாத்தியம் இருந்தாலும், குறைந்த எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.
அதனால், ஒரே சோப்பை பலர் பகிர்ந்து பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில், அந்த சோப்பை நன்றாக கழுவி உலர வைத்த பின் பயன்படுத்துவது பாதுகாப்பானது. அதேபோல், இதற்கு மாற்றுவழி என்பது திரவ சோப்புகள் (liquid soaps) தான். பாட்டில்களில் வரும் இந்த வகையான சோப்புகள், நேரடி தொடர்பின்றி பயன்படுத்தப்படுவதால், தொற்று பரவும் அபாயம் குறையும்.
குளியல் என்பது வெறும் சுத்தமாக இருப்பதற்கான ஒரு செயலாக மட்டுமல்ல. அது ஒரு ஆரோக்கிய பழக்கமாகவும் இருக்க வேண்டும். குளிக்கும்போது, சில நிமிடங்களை ஒதுக்கி, தரமான சோப்புகளை பயன்படுத்தி, சுத்தமாக குளித்தால், நமது தோல் ஆரோக்கியமாக இருக்கும். குடும்ப உறவுகள் என்றாலும் கூட, தனிப்பட்ட சுத்தம் என்பது அவசியம். பாதுகாப்பான குளியல் பழக்கங்கள், ஆரோக்கிய வாழ்வுக்கான அடிப்படை என்று உணர வேண்டும்.