உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் மல்யுத்தப் போட்டி WWE. மிகுந்த பிரபலத்துடன் திகழ்கிறது. வாரந்தோறும் WWE RAW மற்றும் SmackDown என இரு பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில், மல்யுத்த வீரர்களில் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஜான் சீனா (John Cena).
90-களின் சகாப்தத்தில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு போன்ற வீரர்களுக்கு பிறகு, ரசிகர்களின் விருப்பமானவராக ஜான் சீனா உருவெடுத்தார். இவர் 17 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றதுடன், WWE வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக உள்ளார். அண்டர்டேக்கர், தி ராக் மற்றும் ப்ரோக் லெஸ்னர் போன்ற சூப்பர் ஸ்டார்கள் கோலோச்சிய காலத்திலும், WWE பிராண்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற முக்கிய நபர்களில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.
மல்யுத்த வீரராக மட்டுமல்லாமல், ஜான் சீனா ஒரு புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமாகவும் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார். இவரது தற்போதைய நிகர மதிப்பு சுமார் $80 மில்லியன் (தோராயமாக ரூ.660 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மகத்தான செல்வத்தின் பெரும்பகுதி, அவரது WWE ஒப்பந்தங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் திட்டங்கள், அத்துடன் வணிகப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கிறது. இவரது WWE ஒப்பந்தத்தின்படி, அவர் ஆண்டுக்கு சுமார் $12 மில்லியன் சம்பளமும், வணிகப் பொருட்களின் விற்பனையில் ஒரு சதவீதப் பங்கும் பெறுகிறார்.
ஜான் சீனா, ‘சூசைட் ஸ்குவாட்’ மற்றும் ‘ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் 9’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் தகவலின்படி, அவரது பிரபலமான வலைத் தொடரான ‘பீஸ்மேக்கர்’-க்கு ஒரு எபிசோடுக்கு $50,000 முதல் $1 மில்லியன் வரை அவர் சம்பாதிக்கிறார். மேலும், ஜில்லெட், ஹோண்டா உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளுடன் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள விளம்பர ஒப்பந்தங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
தொழில் வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் ஜான் சீனா, சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளார். மேக்-ஏ-விஷ் (Make-A-Wish) அறக்கட்டளை மூலம் அதிகபட்சமாக 650 விருப்பங்களை நிறைவேற்றிச் சாதனை படைத்துள்ளார். குழந்தைகள் மற்றும் ரசிகர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு, உலகளவில் அவருக்கு மேலும் அன்பையும் மரியாதையையும் பெற்றுத் தந்துள்ளது.
Read More : தீபாவளி பண்டிகை.. அதிரடியாக விலை குறைந்த ஆவின் பொருட்கள்..!! இதுதான் செம சான்ஸ்..!! மகிழ்ச்சியில் மக்கள்..!!