வயர்லெஸ் ஹெட்ஃபோன் பயன்படுத்துவது புற்றுநோயை ஏற்படுத்துமா..? நரம்பியல் நிபுணர் விளக்கம்!

wireless headphones

வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள், குறிப்பாக புளூடூத் இயர்போன்கள், இன்றைய காலகட்டத்தில் பலரின் அன்றாட அவசியமாக மாறியுள்ளன. ஆனால், அவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவது புற்றுநோயை ஏற்படுத்துமா என்ற அச்சம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது.


சிலர், “புளூடூத் இயர்போன்களை அணிவது, தலைக்கு அருகில் மைக்ரோவேவ் வைத்திருப்பதற்கு சமம்” என்று கூறி எச்சரித்து வரும் நிலையில், இந்த தகவல்கள் அறிவியல் அடிப்படையில் தவறானவை என நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெய் ஜகநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

மிச்சிகன் நரம்பியல் அறுவை சிகிச்சை நிறுவனத்தில் பணியாற்றும் டாக்டர் ஜெய் ஜகநாதன், அக்டோபர் 13 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், ஏர்போட்ஸ் போன்ற வயர்லெஸ் இயர்போன்கள் குறித்த அச்சங்களுக்கு பதிலளித்துள்ளார்.

அதில், “ஏர்போட்ஸ் போன்ற சாதனங்கள் வெளியிடும் கதிர்வீச்சு, செல்போன்கள் வெளியிடும் கதிர்வீச்சை விட 10 முதல் 400 மடங்கு வரை குறைவு” என அவர் தெளிவுபடுத்தினார். மேலும், இந்த கதிர்வீச்சு அயனியாக்கம் செய்யாத (Non-ionizing radiation) வகையைச் சேர்ந்தது என்பதால், அது செல்களின் டிஎன்ஏவை சேதப்படுத்தும் அளவுக்கு சக்திவாய்ந்ததல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

வயர்லெஸ் இயர்போன்கள் மற்றும் புற்றுநோய் தொடர்பாக அதிகம் மேற்கோள் காட்டப்படும் அமெரிக்க தேசிய நச்சுயியல் திட்டம் (NTP) நடத்திய ஆய்வு குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். அந்த ஆய்வில், எலிகளுக்கு அதிக அளவு RF கதிர்வீச்சு வழங்கப்பட்டபோது, ஆண் எலிகளில் சில வகையான இதய புற்றுநோய்கள் அதிகரித்ததாகக் காணப்பட்டது.

ஆனால், இந்த ஆய்வை பின்னர் ஆய்வு செய்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), “இந்த முடிவுகளை மனிதர்களுக்கும் நேரடியாக பொருத்த போதுமான ஆதாரங்கள் இல்லை” என்று தெரிவித்ததாக டாக்டர் ஜகநாதன் கூறினார். மேலும், 2024-ஆம் ஆண்டு வெளியான மற்றொரு ஆய்வை மேற்கோள் காட்டிய அவர், சில நோயாளிகளில் புளூடூத் சாதனங்கள் பயன்படுத்தப்படுவது புற்றுநோயற்ற தைராய்டு முடிச்சுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றாலும், அதற்கு புற்றுநோயுடன் நேரடியான தொடர்பு இல்லை என்றும் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது, “செல்போன்களுக்கும் புற்றுநோய்க்கும் இடையே உறுதியான தொடர்பு நிரூபிக்கப்படாத நிலையில், அதைவிட பல மடங்கு குறைவான கதிர்வீச்சை வெளியிடும் ஏர்போட்ஸ் போன்ற சாதனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற வாதத்திற்கு அறிவியல் ஆதாரம் இல்லை” என்றார்.

வயர்லெஸ் இயர்போன்கள் ‘மைக்ரோவேவ்’ போன்று ஆபத்தானவை என்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்றும், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அவை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கு தற்போது உறுதியான சான்றுகள் இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more: இந்த நாடுகளில் ஜனவரி 1-ல் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை.. அது ஏன் திமிங்கலம்..?

English Summary

Does using wireless headphones cause cancer? Neurologist explains!

Next Post

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. இந்த செயலியில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு 3 முதல் 6% வரை தள்ளுபடி..!

Wed Dec 31 , 2025
Good news for train passengers.. 3 to 6% discount on train tickets booked on this app..!
Indian Railways 2

You May Like