உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இல்லையென பலர் கூறினாலும், தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கும், இதயத்திற்கும் பல நன்மைகளை தரும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, எடை குறைப்பதற்காக ஜிம் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. சாதாரண நடைபயிற்சியே கொழுப்பு அளவுகளை கட்டுப்படுத்த உதவும் எளிய வழியாகும்.
அதிக கொழுப்பு, குறிப்பாக “LDL” எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரித்தால், அது இரத்த நாளங்களில் படிந்து பிளேக் உருவாக்குகிறது. இதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஆனால், “தினசரி நடைபயிற்சி இதனை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது” என டாக்டர் ஆலன் ரோசான்ஸ்கி கூறுகிறார்.
சமீபத்திய ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. நான்கு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடந்த அதிக எடை கொண்ட பெண்களில், மொத்த கொழுப்பும் கெட்ட கொழுப்பும் 7 mg/dL வரை குறைந்துள்ளது. அதேபோல், 12 வாரங்கள் மிதமான அளவு உடற்பயிற்சி செய்த ஆண்களில் கெட்ட கொழுப்பு 5 முதல் 7 சதவீதம் வரை குறைந்ததாக அறியப்படுகிறது. 40 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களில் நடத்தப்பட்ட ஆய்வில், சிலருக்கு ட்ரைகிளிசரைடுகள் குறைந்திருந்தாலும், சிலருக்கு பெரிய மாற்றம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
நல்ல கொழுப்பு (HDL) அளவை உயர்த்துவதிலும் நடைபயிற்சி உதவுகிறது. இது இரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் கொழுப்பை நீக்குவதோடு, வீக்கம், ஆக்சிஜனேற்றம், இரத்த உறைவு போன்ற பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், இரத்தத்தில் சுழலும் ட்ரைகிளிசரைடுகள் குறைவதும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC) பரிந்துரைப்படி, வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள், அதாவது தினமும் 30 நிமிடங்கள், ஐந்து நாட்கள் நடப்பது போதுமானதாகும். ஆனால், 300 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். “சில நேரங்களில் 5 நிமிட நடைப்பயிற்சியும் கூட உடலுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நடைபயிற்சியை மேலும் பயனுள்ளதாக மாற்ற சில எளிய வழிகளும் உள்ளன. உதாரணமாக, உணவுக்குப் பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பது, சாய்வான பாதையில் நடப்பது, கையில் எடைகளை ஏந்திக்கொண்டு நடப்பது போன்றவை. தினசரி 10,000 அடிகளை இலக்காகக் கொள்ளுதல், ஆரோக்கியமான உணவுகளுடன் நடைபயிற்சியை இணைத்துக் கொள்வதும் நல்ல பலனை தரும்.
மொத்தத்தில், நடைபயிற்சி என்பது யாரும் எளிதில் செய்யக்கூடிய, செலவில்லாத, உடலுக்கும் இதயத்திற்கும் பாதுகாப்பான முதலீடாகும். “நீங்கள் எவ்வளவு வேகமாக நடந்தாலும் முக்கியமில்லை, ஆனால் தொடர்ந்து நடப்பது அவசியம்” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Read More : நவராத்திரி அன்று இந்த வழிபாட்டை மட்டும் மறந்துறாதீங்க..!! முழு அருளும் உங்களுக்கு கிடைக்கும்..!!