நம் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இருக்கும் தக்காளி, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாகும்.இதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது கல்லீரல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதுடன், நாள்பட்ட அழற்சியையும் கட்டுப்படுத்த உதவும். தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணமான லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடண்ட்தான் அதன் ஆரோக்கிய பண்புகளுக்கு முக்கிய காரணமாகும்.
இந்த லைகோபீன், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து, ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கிறது. கல்லீரல் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களை தடுப்பதில் லைகோபீன் திறம்பட செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லைகோபீன், கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை கணிசமாக குறைப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. இது ஆக்ஸிடேட்டிவ் சேதத்தில் இருந்து கல்லீரல் செல்களை பாதுகாத்து, புற்றுநோய் வளர்ச்சியை தூண்டும் செல்லுலார் மாற்றங்களைத் தடுக்கிறது. இதன் மூலம், தக்காளி ஒரு ‘இயற்கையான தடுப்பு காரணியாக’ செயல்படுகிறது. இது ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்திற்கும், புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.
உணவில் தக்காளியை சேர்ப்பது எப்படி..?
* சாலடுகள், சாண்ட்விச்கள் போன்றவற்றில் பச்சையான தக்காளியை சேர்ப்பதன் மூலம் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களை பெறலாம்.
* தக்காளியை சமைத்து சாப்பிடும்போது, அதில் உள்ள லைகோபீன் உடலில் எளிதாக உறிஞ்சப்படும்.
* தக்காளி சாஸ், சூப் மற்றும் பழச்சாறுகள் போன்றவை, லைகோபீனை சீராகப் பெற சிறந்த வழியாகும்.
தக்காளியின் இதர நன்மைகள் :
ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக எடை குறைப்புக்கு உதவுகிறது. லைகோபீன் சருமத்தை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றன.