உடல்நலக் குறைபாடு ஏற்படும் போது அல்லது வழக்கமான பரிசோதனைகளின் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மிக முக்கியமான ஒன்று இரத்த பரிசோதனை. ஆனால், ஒரு ஆய்வகத்திற்குச் சென்று இரத்தம் கொடுப்பதுடன் நமது கடமை முடிந்துவிடுவதில்லை. நாம் செய்யும் மிகச்சிறிய கவனக்குறைவான செயல்கள் கூட, பரிசோதனை முடிவுகளை தலைகீழாக மாற்றி தவறான சிகிச்சை முறைக்கு வழிவகுத்துவிடும். எனவே, இரத்தப் பரிசோதனைக்குத் தயாராகும் முன் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய அத்தியாவசிய விதிமுறைகளை அறிந்து கொள்வது அவசியம்.
பொதுவாக சர்க்கரை நோய் (Diabetes) மற்றும் கொழுப்பின் அளவு (Lipid Profile) தொடர்பான பரிசோதனைகளுக்கு செல்பவர்கள், குறைந்தது 12 மணி நேரமாவது வெறும் வயிற்றில் இருக்க வேண்டும். முந்தைய நாள் இரவு உணவிற்குப் பிறகு, தண்ணீர் தவிர காஃபி, டீ அல்லது எந்த ஒரு பானத்தையும் அருந்துவது முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவை இரத்தத்தின் வேதியியல் பண்புகளைப் பாதிக்கும் என்பதால், பரிசோதனைக்கு ஒரு நாளைக்கு முன்னரே இவற்றுக்குத் தடை விதிப்பது நம்பகமான முடிவுகளைப் பெற உதவும்.
இரத்த அழுத்தம் (BP) பார்க்கும் போது பலருக்குத் தானாகவே ஒரு பதற்றம் தொற்றிக் கொள்ளும். இது உண்மையில் இல்லாத ஒரு உயர் இரத்த அழுத்தத்தை காட்டக்கூடும். எனவே, பரிசோதனைக்கு முன் 5 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து, மனதை ஒருநிலைப்படுத்திய பிறகு அளவீடுகளை எடுப்பதே சரியானது. தைராய்டு அல்லது கார்டிசோல் போன்ற ஹார்மோன் தொடர்பான சோதனைகளை அதிகாலை நேரங்களிலேயே செய்வது துல்லியமான முடிவுகளை தரும். மேலும், காய்ச்சல் அல்லது பிற உடல்நலப் பாதிப்புகள் இருக்கும் நேரத்தில் எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகளைக் கொண்டு ஒட்டுமொத்த உடல்நிலையை தீர்மானிக்க கூடாது. நோய் குணமடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை பரிசோதிப்பதே முறையானது.
இன்றைய காலக்கட்டத்தில், விளம்பரங்களை கண்டு குறைந்த கட்டணத்தில் தரமற்ற ஆய்வகங்களில் பரிசோதனை செய்வதை தவிர்க்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நவீன வசதிகள் கொண்ட ஆய்வகங்களை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. குறிப்பாக 35 வயதை கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது. முந்தைய மருத்துவ அறிக்கைகளை பத்திரமாக சேமித்து வைப்பதன் மூலம், தேவையற்ற மீண்டும் மீண்டும் செய்யப்படும் சோதனைகளை தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி பரிசோதனை முடிவுகளை கண்டு சுயமாக மருந்துகளையோ அல்லது உணவு முறையையோ மாற்றிக் கொள்வது ஆபத்தானது என்பதை உணர வேண்டும்.
Read More : இனி பத்திரப் பதிவுக்கு இது அவசியம்..!! செக் வைத்த தமிழ்நாடு அரசு..!! ஒப்புதல் கொடுத்த ஜனாதிபதி..!!



