பல் துலக்குவது, வாயின் சுகாதாரத்துக்கு ஆரோக்கியமானது. பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி தாங்கள் நாளை ஆரம்பிப்பார்கள். சிலர் பல் துலக்கி, காஃபி அல்லது டீ குடிப்பார்கள். மற்றவர்கள் நேரடியாகவே டீ குடிப்பார்கள். ஆனால், ஆயுர்வேதம் கூறும் ஒரு பரிந்துரை தற்போது மருத்துவ உலகத்திலும் கவனம் பெற தொடங்கியுள்ளது. அது தான் “ஆயில் புல்லிங்”.
ஆயில் புல்லிங் என்றால் என்ன..?
ஆயில் புல்லிங் என்பது, ஒரு மருத்துவ நடைமுறை. இது வாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சில நிமிடங்கள் கொப்பளித்து துப்புவது. இதனை, குறிப்பாக காலை எழுந்தவுடனே பல் துலக்கும் முன் செய்ய வேண்டும்.
எப்படி செய்வது..?
* தேவையான அளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் ஊற்றவும்.
* அதை ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொப்பளிக்கவும்.
* பின்னர் எண்ணெய்யை துப்பி, வெறும் நீரால் வாயை கழுவ வேண்டும். இதை முடித்த பிறகு உடனே பல் துலக்கக் கூடாது. அரை மணி நேரத்திற்கு பிறகு தான் பல் துலக்கவோ, வேறு ஏதேனும் சாப்பிடவோ வேண்டும்.
நன்மைகள் என்ன..?
ஆயில் புல்லிங் செய்வதால், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள், கழிவுகள் அகற்றப்படுகிறது. பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். நாக்கு சுத்தமாகும். மூக்குத் திசைகள் வரை தூய்மையாக இருக்கும். மேலும், இந்த பழக்கம் வாயின் துர்நாற்றம் குறையவும், பல் நோய்களுக்கு எதிராகவும் இது செயல்படுகிறது. தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி, இந்த பழக்கத்தை செய்து வந்தால், ஆரோக்கியமான பற்கள் மட்டுமல்ல, உடல்நலத்துக்கும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.