கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மௌனம் காத்து வந்தார்.
இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்டச் செயலாளர் மதியழகனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தவெக தரப்பிலும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நகல் கிடைத்ததைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் மதியழகன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சூழலில், கரூர் சம்பவத்தால் களையிழந்து காணப்பட்ட பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு நேற்று மாலை நடிகர் விஜய் வருகை தந்தார். அவருடன் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் உடனிருந்தார். கட்சி அலுவலகத்திற்குள் ஏற்கனவே விடுதலையான மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் காத்திருந்தனர். அங்கு வந்த விஜய், அவர்களைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டு கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.
சம்பவங்கள் குறித்தும், சிறை அனுபவம் குறித்தும் விஜய் அவர்களிடம் கேட்டறிந்தார். சிறையில் இருந்த காலத்தின் கசப்பான அனுபவங்களை மதியழகன் கண்ணீருடன் விஜய்யுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது, அவரை தேற்றிய விஜய், “எதையும் சமாளிப்போம், உண்மை விரைவில் வெளியே வரும், பயப்படாதீர்கள், நான் எப்போதும் உங்களுக்குத் துணையாக இருக்கிறேன்” என்று நம்பிக்கையூட்டினார்.
மேலும், “பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நம் சொந்தங்கள். அவர்களை நீங்கள் எப்போதும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றிய நிலவரங்களை நீங்கள் தொடர்ந்து என்னிடம் தெரிவிக்க வேண்டும்” என்றும் விஜய் அறிவுறுத்தினார். அத்துடன், “நான் விரைவில் கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பேன். அதுவரை அவர்களை நம்பிக்கையுடன் இருக்குமாறு சொல்லுங்கள்” என்றும் நிர்வாகிகளிடம் விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More : உஷார்..!! மழைக்காலம் தொடங்கியாச்சு..!! இந்த தவறையெல்லாம் செய்து ஆபத்தில் சிக்கிடாதீங்க..!!



