நவீன வாழ்க்கை முறை, வேலைப்பளு, உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, பலரும் காய்கறிகளை ஒரே நேரத்தில் வாங்கி ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கின்றனர். இது பாதுகாப்பான வழிமுறையாக தோன்றினாலும், சில காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைப்பது சுவையையும், ஊட்டச்சத்துக்களையும் கெடுக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில், பிரிட்ஜில் வைக்கக் கூடாத காய்கறிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பிரிட்ஜில் தவிர்க்க வேண்டிய முக்கிய காய்கறிகள் :
வெள்ளரிக்காய் : நாம் பெரும்பாலும் செய்யும் ஒரு தவறு இது. வெள்ளரிக்காயை ஃப்ரிட்ஜில் வைத்தால், அது வேகமாக கெட்டுவிடும். குறிப்பாக, 10 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பநிலையில் வெள்ளரிக்காய் தனது புத்துணர்ச்சியை இழந்துவிடும். எனவே, வெள்ளரிக்காயை அறையின் வெப்பநிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.
தக்காளி : தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் சுவை குறைந்துவிடும். குளிர்ச்சி அதன் இயற்கையான புளிப்பு சுவையை பாதிக்கும். எனவே, தக்காளியை எப்போதுமே காற்றோட்டமான இடத்தில் வைப்பதே நல்லது.
உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைப்பது தவறு. குளிர்ச்சியான சூழலில் உருளைக்கிழங்கு முளைக்க தொடங்கும் அல்லது அதன் சுவை மாறுபடும். மேலும், அதன் மாவுச்சத்து சர்க்கரையாக மாறி, சமைக்கும் போது நிறம் மாற வாய்ப்பு உண்டு. எனவே, உருளைக்கிழங்கை உலர்ந்த, குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் சேமிப்பதே சிறந்தது.
பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி : இவை ஃப்ரிட்ஜில் வைத்தால் ஈரப்பதம் காரணமாக மெதுவாக அழுகத் தொடங்கும். குறிப்பாக, இலைவகை காய்கறிகள் நேரடியாக ஃப்ரிட்ஜில் வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.
வாழைக்காய் மற்றும் பழுத்த வாழை : வாழைக்காய் மற்றும் பழுத்த வாழை இரண்டும் குளிர்ச்சியில் வைக்கும்போது அவை கருகும். பழுப்பு நிறம் ஏற்படுவதோடு, அதன் சுவையும், வாசனையும் கெடுக்கும்.
வெங்காயம் : வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதில் உள்ள ஈரப்பதம் காரணமாக விரைவில் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. வெங்காயத்தை குளிர்ந்த, உலர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வைத்தால் மட்டுமே அதன் புத்துணர்ச்சி நீண்ட நாட்களுக்கு இருக்கும்.
பூண்டு : பூண்டும் வெங்காயம் போலவே. ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அது முளைக்கும் வாய்ப்பு அதிகம். அதோடு அதன் தனிச்சுவையும் குறைந்து விடும்.
அதிக குளிர்ச்சியில் எல்லா காய்கறிகளும் பாதுகாப்பாக இருக்கும் என்பது தவறான நம்பிக்கையாகும். ஒவ்வொரு காய்கறிக்கும் தனிப்பட்ட சேமிப்பு முறை உள்ளது. உணவுப் பொருட்களின் இயல்பை பாதுகாத்து, நம் உடலுக்கு தேவையான சத்துக்களை நிரப்ப, சரியான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.



