சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜதுரை (30), ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளம்பர் அன்பு கணபதி (28) என்பவருக்கும், ராஜதுரையின் மனைவி மதுவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ராஜதுரை இதனை அறிந்ததும், கணபதியை கண்டித்துள்ளார். ஆனால், கணபதி கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்நிலையில், இரு குடும்பத்தினரும் இந்த விவகாரம் குறித்துப் பேசி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.
இனிமேல் ராஜதுரையின் மனைவியுடன் பேச மாட்டேன் என அன்பு கணபதி உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். ஆனால், அன்று மாலை ராஜதுரைக்கும் அவரது மனைவி மதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்ற மது, ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்துள்ளார். இதனால், அன்பு கணபதி மீது ராஜதுரைக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது.
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அன்பு கணபதிதான் காரணம் என எண்ணிய ராஜதுரை, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அவர் அன்பு கணபதியை அழைத்து, நடந்ததை மறந்துவிடலாம் எனக் கூறி மது அருந்த அழைத்துள்ளார். இதையடுத்து, பெருங்குடி ரயில் நிலையம் அருகே இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியபோது, போதையில் அன்பு கணபதி தனது கள்ளக்காதல் குறித்து ராஜதுரையிடம் பெருமையாக பேசியுள்ளார்.
மேலும், அன்பு கணபதியின் பேச்சை கேட்டு ஆத்திரமடைந்த ராஜதுரை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்த காயங்களுடன் தனது வீட்டை நோக்கி ஓடிய அன்பு கணபதியை, அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, ராஜதுரை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



