அசைவ விரும்பிகளின் வீடுகளில் முட்டை எப்போதுமே இருக்கும். தினமும் முட்டைகளை பயன்படுத்துவோர் அதிக அளவில் அவற்றை வாங்கிச் சேமித்து வைப்பதால், அவை கெட்டுப்போகாமல் பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல்கள் அவசியம். முட்டைகளை சரியாகச் சேமிக்காவிட்டால், அவை விரைவில் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது.
முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது கவனம் :
பொதுவாக, முட்டைகளை வாங்கி வந்தவுடன் ஃப்ரிட்ஜில் வைப்பதே சிறந்த முறையாகும். பெரும்பாலான ஃப்ரிட்ஜ்களில் முட்டை வைப்பதற்கான தனி இடம் அமைந்திருக்கும். ஆனால், ஃப்ரிட்ஜ் கதவை அடிக்கடி திறப்பது மூடுவதால் வெப்பநிலை மாறுபட்டு, பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது. எனவே, முட்டைகளை ஃப்ரிட்ஜின் பிரதான உட்பகுதியில், வெப்பநிலை நிலையாக இருக்கும் இடத்தில் வைப்பதே சிறந்தது.
முட்டையை கழுவக் கூடாது :
முட்டையின் ஓட்டின் மேல் அழுக்கு அல்லது இறகுகள் ஒட்டிக்கொண்டிருந்தால், பலர் அவற்றைக் கழுவி வைப்பார்கள். ஆனால், இது தவறு. முட்டையின் ஓடுகள் மிக மென்மையானவை. கழுவும்போது விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் முட்டைக்குள் நுழையலாம். எனவே, முட்டைகளை கழுவாமல், ஈரப்பதம் இல்லாத பாத்திரத்தில் அல்லது டப்பாவில் வைக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜில் வைப்பதற்கான சரியான முறை :
முட்டைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில், அடியில் டிஸ்யூ பேப்பர் அல்லது நியூஸ் பேப்பர் விரித்து அதன் மேல் வைக்கலாம். முட்டையின் அகலமான பகுதி கீழே, கூர்மையான பகுதி மேலே இருக்குமாறு அடுக்கி வைப்பது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்த முட்டைகளைத் தேவைப்படும்போது மட்டும் வெளியே எடுத்துப் பயன்படுத்த வேண்டும். அடிக்கடி வெளியே வைப்பதும், மீண்டும் உள்ளே வைப்பதும் முட்டையின் தரத்தைப் பாதிக்கலாம்.
வெப்பநிலையில் வைப்பது :
முட்டைகளை அறை வெப்பநிலையில் அதிக வெப்பம் இல்லாத, சற்று இருட்டான மற்றும் குளிர்ச்சியான இடத்தில் வைக்கலாம். ஆனால், இந்த முறையில் முட்டைகளை அதிகபட்சம் ஒன்று முதல் 3 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அதற்கு மேல் சேமிக்க ஃப்ரிட்ஜே பாதுகாப்பானது. எனவே, வீட்டில் முட்டை வாங்கும் போது சரியான வழிமுறைகளை பின்பற்றிச் சேமித்தால், அவை வீணாகாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். தேவையான அளவு மட்டும் வாங்கிப் பயன்படுத்துவதும் சிறந்த நடைமுறையாகும்.



