இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கியம் மீது மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உடல் எடையை கட்டுப்படுத்தவும், தசைகள் வலிமையடையவும், மனச்சோர்வை குறைக்கவும் பலரும் உடற்பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். உண்மையிலேயே, ஒழுங்கான உடற்பயிற்சி வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், உடற்பயிற்சி செய்வது மட்டுமன்றி, அதற்குப் பிறகு எதைச் சாப்பிடுகிறோம் என்பதும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி முடிந்ததும் உடல் சோர்வாகி, உடனே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது இயல்பானது தான். அந்த நேரத்தில் நாம் தேர்வு செய்யும் உணவுகள், பயிற்சியின் விளைவுகளை பாதிக்கக் கூடியவையாக கூட இருக்கலாம். சரியான உணவைத் தேர்வு செய்வது போலவே, தவறான உணவுகளைத் தவிர்ப்பதும் மிகவும் முக்கியம். எனவே, இந்தப் பதிவில், உடற்பயிற்சி செய்த பின் நாம் தவிர்க்க வேண்டிய முக்கியமான உணவுகளைப் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
முதல் தவிர்க்க வேண்டியது அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகள். உடற்பயிற்சி செய்த பிறகு, உடலுக்கு விரைவில் உறிஞ்சும் சத்துகள் தேவைப்படும் நேரம். ஆனால், எண்ணெய் மற்றும் தீவிரமாக வதக்கப்பட்ட உணவுகள், ஜீரணத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், நன்மையை விட நஷ்டமே அதிகம்.
அதே போல, அதிக சர்க்கரை உள்ள பானங்கள் மற்றும் இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும். சிலர் உடற்பயிற்சிக்குப் பிறகு எனர்ஜி டிரிங்க் அல்லது சோடா போன்ற பானங்களை குடிப்பது வழக்கமாக இருக்கும். ஆனால், இவை உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துகின்றன. இது உடல் எடையை குறைக்கும் உங்கள் முயற்சிக்கே எதிரானதாகும்.
கேக், பிஸ்கட், பாக்கெட் சிப்ஸ் போன்ற உணவுகளில் அதிக உப்பு, சர்க்கரை மற்றும் செயற்கை ரசாயனங்கள் உள்ளன. இவை உடல் நீர்ச்சத்தை குறைத்து, தசை வளர்ச்சியைத் தடுக்கும்.
மேலும், சிலர் உடற்பயிற்சிக்குப் பிறகு காலியான வயிற்றில் காஃபி அல்லது தேநீர் குடிப்பது வழக்கமாக இருக்கலாம். இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தரவில்லை. இதற்கு பதிலாக, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி முடிந்ததும் உடலை உறுதியாக வைத்திருக்க, நல்ல உணவுகளைத் தேர்வு செய்வது அவசியம். அவ்வாறு செய்யாமல் தவறான உணவுகளைத் தேர்வு செய்தால், நீங்கள் செய்த பயிற்சியின் பலன் குறையும். எனவே, உடற்பயிற்சிக்குப் பிறகு சத்தான மற்றும் சமநிலையான உணவுகளை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
Read More : வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவரா நீங்கள்..? இப்படி வழிபட்டால் முழு அருளும் கிடைக்கும்..!!