ரணில் விக்கிரமசிங்கே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சுவாரஸ்ய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் பொங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே வருகை தந்திருந்தார். அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக யாழ்ப்பாணம் வந்திருந்த அவருக்கு, தமிழ் கலாச்சார முறைப்படி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டும், இந்து சமய முறைப்படி வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆனால், தங்கள் பகுதிக்கு அதிபர் வந்திருப்பதை அறிந்த ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் திடீரென அங்கு குவிந்துவிட்டனர். ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நிலங்களை மறுபடியும் வழங்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதுதொடர்பாக அதிபரிடம் வலியுறுத்துவதற்காக, பொங்கல் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் அவர்கள் நுழைய முயன்றனர். ஆனால், அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால், இருதரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பாய்ச்சி ஒடுக்க முயன்ற நிலையில், ஈழத் தமிழர்கள் அசராமல் நின்று, தொடர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இப்படிப்பட்ட சூழலில்தான் சுவாரஸ்ய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறை, தண்ணீர் பீரங்கி வாகனங்களை கொண்டு வந்து நிறுத்துகிறது. ஆனாலும் மாணவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்புகின்றனர். இதனால், வேறு வழியின்றி தண்ணீர் பீய்ச்சியடித்து அவர்களை விரட்ட போலீஸ் முயற்சிக்கிறது. இதில், பலர் கலைந்து தெறித்து ஓடுகின்றனர். ஆனால், போன வேகத்திலேயே அவர்கள் திரும்பி வந்து, தலையில் ஷாம்பூ தேய்த்து, குளிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். தலையில் ஷாம்பூவுடன் அடுத்த சுற்று தண்ணீர் பீய்ச்சலுக்கு உற்சாகமாக ஷாம்பு குளியலில் ஈடுபடுகின்றனர். சிலர் குளிருக்கு ஈடுகொடுக்க குளித்துக் கொண்டே டான்ஸ் ஆடுகின்றனர். மாணவர்களின் இந்த திடீர் செயலால் போலீசார் விக்கித்து நிற்கிறார்கள். ஆனாலும் அவர்களை போலீசார் மென்மையாகவே கையாள்கிறார்கள். இந்த வீடியோதான் இணையத்தில் ஷேர் ஆகிறது.