நாடு முழுவதும் மாநில தேர்தல்களில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் அறிவிக்கப்படும் உரிமைத் தொகை திட்டங்கள் ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றிக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், இதேபோன்ற அறிவிப்புகள் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் ஆளுங்கட்சிகளுக்குக் கை கொடுத்தன. குறிப்பாக, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெற்ற அபார வெற்றிக்கு, பெண்களுக்குக் கடன் திட்டங்கள் மற்றும் அதிரடி நிதி அறிவிப்புகள் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படுகிறது.
பீகாரில், ‘மகிளா ரோஜ்கர் யோஜனா’ திட்டத்தின் கீழ், சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி வழங்குவது போல, வீட்டுப் பெண்களுக்கு முதலில் ரூ.10,000 கடன் வழங்கப்பட்டது. முதல்வர் நிதிஷ் குமார் தனது பிரச்சாரத்தின்போது, அந்தக் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்தது, ஜாதி, மதம் கடந்து பெண் வாக்காளர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக NDA கூட்டணிக்கு ஈர்த்தது. இந்த தேசிய அளவிலான வெற்றிகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள திமுக அரசு ஆயத்தமாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் பரிசு ரூ.2,000..?
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், முந்தைய அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொருட்கள் தரமற்றதாக இருந்ததால் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தியை சரி செய்ய வேண்டிய கட்டாயம் திமுக அரசுக்கு உள்ளது. இதன் காரணமாக, வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.3000 வழங்கலாம் என்று மூத்த அமைச்சர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முதல்வர் தரப்பில் விசாரிக்கப்பட்டபோது, நிதி நெருக்கடியை சுட்டிக்காட்டி அதிகபட்சமாக ரூ.1000 மட்டுமே சாத்தியம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட முதல்வர், நிதி ஏற்பாடுகளை சமன் செய்து, பொங்கல் பரிசுத் தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி கொடுக்கலாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கூடிய விரைவில் பொங்கல் பரிசு ரூ.2000 பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1500..?
பொங்கல் பரிசு குறித்த ஆலோசனையோடு, முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது பற்றியும் அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார். தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத்தொகையை, ஜனவரி மாதம் முதல் விடுபட்ட மகளிரையும் சேர்த்து வழங்கும் சமயத்தில், ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கலாமா என்று முதல்வர் கேட்டுள்ளதாக தெரிகிறது. அதிகாரிகளின் ஆலோசனைகளையும் அவர் கேட்டறிந்திருக்கிறார்.
எனவே, வரவிருக்கும் நாள்களில், பொங்கல் பரிசுத் தொகை உயர்வு மற்றும் மகளிர் உரிமைத் தொகை உயர்வு என இரண்டு முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அறிவிப்புகள், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள திமுக அரசு வகுக்கும் ஒரு பெரிய மக்கள் நலத் திட்ட வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
Read More : கொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெற வேண்டுமா..? விவசாயிகளே இந்த டிரிக்ஸை யூஸ் பண்ணுங்க..!!



