உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சிமெண்ட் தொழிற்சாலை நடத்தி வந்த தொழிலதிபர் மஹானா என்பவருக்கும், டெல்லியை சேர்ந்த 25 வயதான நிகிதாவுக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, மஹானா லக்னோவில் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானார்.
இதன் காரணமாக, அவர் தனது மனைவி நிகிதாவிடம் ரூ.15 லட்சம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மஹானாவின் தாயாரும் வரதட்சணை கேட்டு நிகிதாவைக் கடுமையாக கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு நடந்த விருந்து ஒன்றில் நிகிதாவும், மஹானாவும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்து அவர்கள் வீடு திரும்பியதும், மீண்டும் பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென நிகிதா மயங்கி கீழே விழுந்தார். அதே நேரத்தில், நிகிதாவின் சகோதரி முஸ்கன், சாதாரணமாக அவருக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது, நிகிதா மயக்கமடைந்து கீழே விழுந்த தகவல் அவருக்குத் தெரிய வந்துள்ளது.
உடனே அவர், நிகிதாவைமருத்துவமனையில் அனுமதிக்கும்படி மஹானாவிடம் கண்ணீருடன் கெஞ்சியுள்ளார். ஆனால், மஹானா அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், சிறிது நேரத்திலேயே, நிகிதா துடிதுடித்து உயிரிழந்தார்.
நிகிதா இறந்த பிறகு, மஹானாவும் அவரது குடும்பத்தினரும் இந்தச் செய்தியை நிகிதாவின் தாயாருக்கு தெரிவித்துள்ளனர். மகளின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிகிதாவின் குடும்பத்தினர், வரதட்சணைக் கொடுமை மற்றும் தாக்குதல் காரணமாகவே தங்கள் மகள் கொல்லப்பட்டதாக கூறி, நிகிதாவின் கணவர் மஹானா மற்றும் அவரது மாமியார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : நீங்கள் மின்னல் தாக்கும் இடத்தில் இருக்கீங்களா..? உங்கள் உயிரை பாதுகாப்பது எப்படி..?



