தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற அரசின் அனைத்து நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது.
இதனால் ரேஷன் கார்டில் திருத்தம் கோரி விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை சமீபகாலமாக கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், அரசு ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் தமிழக அரசு புதிய முக்கியக் கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்கள் அட்டையில் முகவரி மாற்றம், புதிய உறுப்பினரை சேர்த்தல், குடும்பத் தலைவர் மாற்றம் மற்றும் உறுப்பினரை நீக்குதல் ஆகிய 4 முக்கிய சேவைகளுக்கும் வருடத்திற்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதாவது, ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் மட்டுமே விண்ணப்பிக்கவும், அதற்கான ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
இதுகுறித்து உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “இந்த 4 சேவைகளில் மாற்றங்களைச் செய்யவும், சேவைகளை முறைப்படுத்தவும், ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கும் வகையில் மென்பொருளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு நலத்திட்டங்களைப் பெற ரேஷன் கார்டு தகவல்கள் சரியாக இருக்க வேண்டியது அவசியம் என்பதால், மக்கள் அடிக்கடி திருத்தம் கோரி விண்ணப்பிப்பது அதிகரித்தது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் அதிகப்படியான பணிச்சுமையைக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் வழக்கம் போல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை தொடரும் நிலையில், திருத்தங்கள் செய்வதில் மட்டுமே காலவரையறை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



