அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) நிறுவனம், திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் இவை அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய கொள்கைகள், புதியதாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள அனைத்து குடும்ப அடிப்படையிலான குடியேற்ற மனுக்களுக்கும் உடனடியாக பொருந்தும்.
USCIS வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணத்தின் பெயரில் நடைபெறும் மோசடியான விண்ணப்பங்கள், குடும்ப அடிப்படையிலான குடியேற்றத் திட்டங்களில் நம்பிக்கையைக் குறைக்கும். இவை அமெரிக்காவின் குடும்ப ஒற்றுமை கொள்கையை மோசமாக பாதிக்கின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இனிமேல் திருமணத்தின் மூலம் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தம்பதிகள், தங்கள் உறவு உண்மையானது என்பதை நிரூபிக்க வலுவான ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
உறவின் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டிய ஆவணங்கள்:
* தம்பதிகள் ஒரே வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவது அல்லது இணைந்து பில்கள் செலுத்துவது உண்மையான திருமண உறவின் நிஜ அடையாளமாக கருதப்படுகிறது.
* பல்வேறு நேரங்களில், இடங்களில், குடும்பத்தினருடன், அல்லது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அந்த உறவு சுயமாகவும் சமூக ரீதியாகவும் நடந்துவருகிறது என்பதை உறுதி செய்யும்.
* உறவினர்கள், நண்பர்கள் அல்லது நெருங்கிய அறிமுகத்தினரிடமிருந்து உறவின் உண்மைத்தன்மையை வலியுறுத்தும் கடிதங்கள். இவை “affidavit letters” எனப்படுகின்றன. கைப்பட எழுதப்பட்டு, கையொப்பம் செய்யப்பட்டிருப்பது அவசியம். எழுதியவர் அந்த தம்பதியை எவ்வளவு காலமாக அறிந்துள்ளார், அவர்களின் உறவை எப்படி தெரிந்துகொண்டார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
* ஒரே ஸ்பான்சரால் அல்லது ஒரே பயனாளிக்காகத் தாக்கல் செய்யப்பட்ட பல விண்ணப்பங்கள் உட்பட, முந்தைய விண்ணப்பங்களின் மறுஆய்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
* குறிப்பாக, H-1B போன்ற பிற விசாக்களில் அமெரிக்காவில் உள்ளவர்கள் திருமணத்தின் மூலம் நிலை மாற்றத்தை நாடும்போது, அவர்களின் வரலாறு தீவிரமாக ஆராயப்படும்.
* கிரீன் கார்டு விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர் தகுதியற்றவராக அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவராகக் கண்டறியப்பட்டால், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்,
* தகுதியான திருமணங்கள் மற்றும் குடும்ப உறவுகளைப் பரிசோதித்து, அவை உண்மையானவையாகவும் அனைத்து சட்டங்களுக்கும் இணங்குபவை என்பதை உறுதி செய்த பிறகே விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் கட்டாயம்: திருமணத்தின் செல்லுபடியை மதிப்பிடுவதற்கு இப்போது அடிக்கடி நேரில் நேர்காணல்கள் தேவைப்படும். தம்பதியினர் ஒருவருக்கொருவர் எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தவும், அவர்களின் கூட்டு வாழ்க்கை பற்றிய விவரங்களை சரிபார்க்கவும் அதிகாரிகள் கேள்விகளைக் கேட்கலாம்.
USCIS அலுவலகங்கள் தற்போது “relationship bona fide” எனப்படும் உண்மைத் திருமண உறவுகளை உறுதி செய்யும் பணியை கடுமையாக மேற்கொள்கின்றன. அதனால், ஒவ்வொரு ஆதாரமும் தெளிவாகவும் சரியான முறையிலும் அளிக்கப்பட வேண்டும்.
Read more: 5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் சேமிக்கணுமா..? இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் உடனே சேருங்கள்..!