நம்மில் பலருக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காஃபி அருந்தாமல் பொழுது விடியாது. காஃபின் உட்கொள்வது இதயப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற பொதுவான கூற்று பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில், ஒரு புதிய மருத்துவ ஆய்வு இந்தக் கருத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. யு.சி. சான் பிரான்சிஸ்கோ மற்றும் அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான இந்த ஆய்வு, தினமும் ஒரு கப் காஃபின் கலந்த காஃபி குடிப்பதால், இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படலாம் என்று கண்டறிந்துள்ளது.
‘A-Fib’ அபாயத்தை குறைக்கும் காஃபி :
காஃபி குடிக்கும் பழக்கம், ஒழுங்கற்ற மற்றும் வேகமான இதயத் துடிப்பான ‘ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்’ (Atrial Fibrillation – A-Fib) ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. A-Fib என்பது பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் ஒரு பொதுவான கோளாறு ஆகும். சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா போன்ற நாடுகளில் A-Fib பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், காஃபி மீதான இந்த புதிய கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. A-Fib போன்ற இதயப் பிரச்சனைகள் உள்ளவர்கள், இதுவரை அறிகுறிகள் தூண்டப்படலாம் என்ற அச்சத்தில் காஃபினைத் தவிர்க்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
‘DECAF’ எனப் பெயரிடப்பட்ட இந்தச் சீரற்ற மருத்துவ பரிசோதனையில், ஏற்கனவே A-Fib பாதிப்பு உள்ள 200 நோயாளிகளின் காஃபி குடிக்கும் பழக்கம் கண்காணிக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் ஆறு மாதங்களுக்குக் குறைந்தது ஒரு கப் காஃபின் கலந்த காஃபியை அருந்த வேண்டும் அல்லது காஃபினைத் தவிர்க்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர்.
ஆய்வின் முடிவில், காஃபி அருந்தியவர்களுக்கு மீண்டும் மீண்டும் A-Fib ஏற்படும் அபாயம் 39% குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு, காஃபின் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு டையூரிடிக்காகச் செயல்படுவது மற்றும் காஃபியில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நிபுணர்களின் கருத்து :
யு.சி.எஸ்.எஃப் ஹெல்த் நிறுவனத்தின் எலெக்ட்ரோபிசியாலஜிஸ்டான கிரிகோரி எம். மார்கஸ் கூறுகையில், காஃபின் நுகர்வு நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் இப்போது வலுவாகின்றன என்றார். ஆய்வின் முதல் எழுத்தாளரான கிறிஸ்டோபர் எக்ஸ். வோங், “A-Fib உள்ள நோயாளிகள் காஃபியைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரைத்த நிலையில், இந்தச் சோதனை அதற்கு நேர்மாறாக, காஃபி பாதுகாப்பை அளிக்க வாய்ப்புள்ளது என்பதை காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், JAMA நெட்வொர்க் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம், இதய நோயாளிகளுக்கான சிகிச்சையிலும் வாழ்க்கை முறை ஆலோசனைகளிலும் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.



