கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படையை ஏவித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துவிட்டு, சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி 150 கி.மீ தொலைவில் வீசியெறிந்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி தாமரைக்குளம் பகுதியில் வசித்து வந்த தேவா (எ) ரித்தீஷ் (27) என்ற கூலித்தொழிலாளி, கடந்த டிசம்பர் 26 முதல் மாயமானதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆரம்பத்தில், கணவன் – மனைவி தகராறில் அவர் வீட்டை விட்டுச் சென்றிருக்கலாம் என தேவாவின் மனைவி இந்திராணி (26) நாடகமாடி போலீசாரை திசைதிருப்ப முயன்றார். ஆனால், போலீசாரின் புலனாய்வில் சிக்கிய ஒரு சிசிடிவி காட்சி, இந்த மர்ம மரணத்தின் முடிச்சை அவிழ்த்தது.
சம்பவத்தன்று தேவாவின் வீட்டிற்கு அருகே கரூர் பதிவெண் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்று வந்து சென்றதை சிசிடிவி மூலம் போலீசார் உறுதி செய்தனர். ஆம்புலன்ஸ் குறித்து போலீசார் தீவிர விசாரணைக்கு இறங்கியதை அறிந்த இந்திராணி, வேறு வழியின்றி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் சரணடைந்து தனது பகீர் வாக்குமூலத்தை அளித்தார். அதில், தனக்கும் தனது சித்தப்பா முறையான வினோத்குமார் (41) என்பவருக்கும் இடையே இருந்த திருமணத்தை மீறிய உறவே இந்த கொலைக்கு காரணம் என்று தெரிவித்தார்.
வாக்குமூலத்தின்படி, இந்த கள்ளத்தொடர்பை தேவா கண்டித்ததால், அவரை தீர்த்துக்கட்ட இந்திராணியும் வினோத்குமாரும் திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று இரவு வினோத்குமார் கரூரில் இருந்து சில நபர்களுடன் வந்து தேவாவிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து தேவாவை கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொலையை மறைக்க, கரூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸில் உடலை ஏற்றிச் சென்று, சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வீசியுள்ளனர். எதற்கும் கலங்காத இந்திராணி, இவை அனைத்தையும் முடித்துவிட்டு எதுவுமே தெரியாதது போல் தனது தாய் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.
தற்போது இந்திராணியை கைது செய்துள்ள போலீசார், மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். தடவியல் நிபுணர்கள் முன்னிலையில் கொலை நடந்த இடத்தில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கரூர் மருத்துவமனையில் உள்ள தேவாவின் உடலை உடற்கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி வினோத்குமார் மற்றும் கூலிப்படையினரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.



