வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும், போக்குவரத்துத் துறையின் டிஜிட்டல் சேவைகளையும் உறுதி செய்யும் விதமாக, ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகன உரிமையாளர் சான்றிதழில் (RC) சரியான தொலைபேசி எண்ணைப் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மொபைல் எண் இணைப்பின் அவசியம் என்ன..?
போக்குவரத்துத் துறை அதன் முக்கியமான அறிவிப்புகள் அனைத்தையும் குறுஞ்செய்தி (SMS) மூலமாகவே அனுப்புகிறது. குறிப்பாக, இன்சூரன்ஸ் முடிவு தேதி, சாலை வரி நினைவூட்டல், மாசுக் கட்டுப்பாடு புதுப்பிப்பு தேதி, போக்குவரத்து அபராதம் பற்றிய தகவல்கள் போன்றவற்றை உடனடியாக அறிந்து கொள்ள இந்த இணைப்பு கட்டாயம். இதன் மூலம் தேவையற்ற அபராதங்கள் மற்றும் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
டிரைவிங் லைசன்ஸுக்கான மொபைல் எண் புதுப்பிப்பு :
* பெரும்பாலான சேவைகளை ஆன்லைனிலேயே முடிக்கும் வகையில், மத்திய அரசின் பரிவாகன் (Parivahan) இணையதளம் மூலம் எளிதாக எண்ணைப் புதுப்பிக்கலாம்
* முதலில், parivahan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
* அங்குள்ள “Online Services” பிரிவில், “Driving Licence Related Services” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
* மாநிலத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, “Update Mobile Number” அல்லது “DL Services – Mobile Number Update” என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
* ஓட்டுநர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, திரையில் தோன்றும் எண்ணைச் சரிபார்த்து, புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
* புதிய எண்ணுக்கு வரும் OTP-யை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், உங்கள் உரிமத்துடன் எண் இணைக்கப்பட்டு விடும்.
ஆர்.சி.-க்கான புதுப்பிக்கும் முறை :
* ஆர்.சி.யில் எண்ணைப் புதுப்பிக்கவும் பரிவாகன் தளத்தைப் பயன்படுத்தலாம்:
* பரிவாகன் இணையதளத்தில் “Vehicle Related Services” என்பதைத் தேர்ந்தெடுத்து, “Vehicle Registration” பகுதியில் உள்ள “Update Mobile Number”-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
* அங்கு ஆர்.சி. எண், சேசிஸ் எண், இன்ஜின் எண் போன்ற வாகனத்தின் விவரங்களை உள்ளீடு செய்து, புதிய எண்ணைப் பதிவு செய்து OTP மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
நேரடிப் புதுப்பிப்பு :
ஆன்லைன் வசதி இல்லாதவர்கள் அருகில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) நேரில் சென்று, “Mobile Number Update for DL/RC” படிவத்தைப் பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் ஆதார ஆவணங்களின் நகல்களை (ஆதார்/பான்) இணைத்துச் சமர்ப்பித்தால், அலுவலர்கள் புதிய எண்ணைப் பதிவு செய்வார்கள்.