டெல்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்குக் குளிர்பானத்தில் ரகசியமாக போதைப்பொருளைக் கலந்து கொடுத்து, அவரைப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், தற்போது டெல்லியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். இந்நிலையில், அதே ஜிந்த் பகுதியைச் சேர்ந்தவரும், டெல்லியில் போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருபவருமான ஒரு இளைஞர், அந்த மாணவிக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால், கடந்த செப்.9ஆம் தேதி அவரை ஒரு பார்ட்டிக்கு வரும்படி அழைத்துள்ளார்.
நன்கு பழக்கமானவர் என்பதால் மாணவி அந்த பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு, அந்த மாணவிக்கு கொடுத்த குளிர்பானத்தில் ரகசியமாகப் போதைப்பொருளைக் கலந்து கொடுத்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்த மாணவியை, அந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், அவருடைய இரண்டு நண்பர்கள் இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். சுயநினைவு இழந்திருந்த அந்தப் பெண்ணை மற்ற இரண்டு நண்பர்களும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், மாணவி சுயநினைவு திரும்பிய பிறகு அந்த 20 வயது இளைஞன், அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டி பல்வேறு சூழல்களில் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். ஆரம்பத்தில் தனது எதிர்காலம் மற்றும் குடும்பத்தை கருதி, இந்த மிரட்டலுக்குப் பயந்து மாணவி மௌனம் காத்துள்ளார்.
ஆனால், இந்த மிரட்டல் எல்லை மீறியதால், ஒருகட்டத்தில் அவர் நடந்த உண்மைகளையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், மாணவி அக்டோபர் 2-ஆம் தேதி காவல்துறையை அணுகிப் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள 3 குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.