ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்ட ஓட்டுநர், அந்த உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் பரிமளா தம்பதியினர், சுமார் 10 ஆண்டுகளாக திருமணம் முடிந்து பெருந்துறையில் உள்ள காசிப் பிள்ளை பகுதியில் வசித்து வந்தனர். ஸ்ரீதர், அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்து வந்த நிலையில், பரிமளா அருகில் ஒரு இ-சேவை மையம் நடத்தி வந்தார்.
ஸ்ரீதர் வேலை செய்யும் உணவகத்திற்கு அடிக்கடி உணவு அருந்த வந்த பெருந்துறையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற ஓட்டுநருடன் ஸ்ரீதருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிய நண்பர்களாகினர். இந்த நட்பின் காரணமாக, கார்த்திகேயன் அடிக்கடி ஸ்ரீதர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால், ஸ்ரீதரின் மனைவி பரிமளாவுடன் கார்த்திகேயனுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்தை மீறிய கள்ளக்காதலாக மாறியது.
ஸ்ரீதருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், கார்த்திகேயன் அடிக்கடி ஸ்ரீதருடன் சேர்ந்து அவரது வீட்டிலேயே மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது, ஸ்ரீதருக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்து மயக்கமடையச் செய்துவிட்டு, கார்த்திகேயன் பரிமளாவுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
அதேபோல ஒரு நாள் இரவு, மது அருந்திக் கொண்டிருந்தபோது போதை தெளிந்த ஸ்ரீதர், கார்த்திகேயனும் பரிமளாவும் தனிமையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இருவரையும் கண்டித்த அவர், தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் கோபமடைந்த கள்ளக்காதலன் கார்த்திகேயன், மறுநாள் ஸ்ரீதரிடம் மன்னிப்புக் கோருவதுபோல அவரைத் தனியாக மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து, கார்த்திகேயன் ஸ்ரீதரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உடனே அவர் பரிமளாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், இருவரும் சேர்ந்து ஸ்ரீதரின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, அங்குள்ள கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர். சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாக்கு மூட்டையைத் திறந்து பார்த்தபோது, ஸ்ரீதரின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸ் விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி பரிமளா கள்ளக்காதலன் கார்த்திகேயனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. தற்போது போலீசார் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



