அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதலே, வெளிநாட்டினருக்கான குடியேற்ற விதிகள் மற்றும் விசா நடைமுறைகள் பெரும் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருகின்றன. இதன் நேரடி விளைவாக, அமெரிக்க கனவுடன் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக ஐடி துறையை சேர்ந்தவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
அமெரிக்காவிற்குப் பணியின் நிமித்தமாகச் செல்ல உதவும் ‘ஹெச்-1பி’ (H-1B) விசா நேர்காணல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஓராண்டுக்கும் மேலாக தள்ளிவைக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, இந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல நேர்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு, முதலில் பிப்ரவரி மாதத்திற்கும், பின்னர் 2026 அக்டோபர் மாதத்திற்கும் மாற்றப்பட்டுள்ளன.
அதேபோல், 2026 தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த நேர்காணல்களும் அந்த ஆண்டின் இறுதிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் விசா ஒப்புதல் பெறுவதில் ஓராண்டுக்கும் மேலாகத் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தால், வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்ல காத்திருப்போர் மற்றும் விசாவைப் புதுப்பிப்பதற்காக இந்தியா வந்திருப்போர் என இருதரப்பினரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதத்திற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. விசா கோரி விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைதளக் கணக்குகளை (Social Media Analysis) அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். அமெரிக்க அரசுக்கு எதிராகவோ அல்லது அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையிலோ கருத்துக்களைப் பதிவிட்டவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்பதில் டிரம்ப் அரசு உறுதியாக உள்ளது. இந்த விரிவான ஆய்வின் காரணமாகவே நேர்காணல் தேதிகள் மாதக்கணக்கில் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
விசா கிடைப்பதில் நீடிக்கும் இந்த இழுபறியால் பல இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரமான வேலையை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்துத் தூதரக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் அதிகாரிகளின் இருப்பைப் பொறுத்தே நேர்காணல் தேதிகள் மாற்றப்படுகின்றன” என்று சுருக்கமாகப் பதிலளித்துள்ளனர். குடியேற்ற வழக்கறிஞர்களோ, “இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாகச் செய்ய எதுவுமில்லை; பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களிடம் பேசி ‘Work from Home’ அல்லது நீண்டகால விடுப்புக்கு அனுமதி கோருவதே இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி” என அறிவுறுத்துகின்றனர்.
Read More : எண்ணெய் தேய்த்து குளிக்க இந்த நாள் மட்டுமே சிறந்தது..!! நீண்ட ஆயுள் பெற இதை பண்ணுங்க..!!



