சென்னையில் தொழிலதிபர் ஒருவரை ஆசை வார்த்தைகளால் மயக்கி, அவரிடமிருந்து 10 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற கில்லாடிப் பெண்ணையும், அவரது கணவரையும் தேனாம்பேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த 47 வயது தொழிலதிபர் மணி என்பவர், தனது காரில் காத்திருந்தபோது குன்றத்தூரைச் சேர்ந்த தீபிகா லட்சுமி (22) என்பவருடன் அறிமுகமாகியுள்ளார். தன்னை ஒரு அனாதை என்றும், உணவிற்கே வழியில்லாத வறுமையில் இருப்பதாகவும் கூறி மணியின் பரிதாபத்தைப் பெற்ற தீபிகா, அடுத்த சில நாட்களிலேயே அவருடன் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு நெருக்கமாகப் பழகியுள்ளார்.
இந்த ‘நட்பின்’ உச்சமாக இருவரும் ஈசிஆர் பகுதியில் வலம் வந்துவிட்டு, கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். அங்கு தொழிலதிபர் மணி மது போதையில் அயர்ந்து தூங்கிய தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட தீபிகா, அவரது கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியுடன் மின்னல் வேகத்தில் மறைந்துள்ளார். காலையில் கண்விழித்த மணி, நகையும் பெண்ணும் மாயமானதை கண்டு நிலைகுலைந்து போலீசில் புகாரளித்தார்.
தீபிகாவின் செல்போன் சிக்னலை வைத்து குன்றத்தூரில் அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. பிடிபட்ட தீபிகாவிற்கு ஏற்கனவே 5 திருமணங்கள் முடிந்துவிட்டதும், ஒவ்வொரு கணவரிடமிருந்தும் சொத்துக்களைப் பறித்துக்கொண்டு விவாகரத்து செய்ததும் தெரியவந்தது. தற்போது 6-வதாக சதீஷ் என்பவருடன் வசித்து வரும் தீபிகா, தனது கணவருடன் இணைந்தே இந்த ‘ஹனி டிராப்’ திட்டத்தை தீட்டியுள்ளார்.
தொழிலதிபரிடம் திருடிய 10 சவரன் சங்கிலியை விற்று, தனது 6-வது கணவர் சதீஷிற்கு தீபிகா ஒரு புதிய ‘KTM’ பைக்கை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளதும் விசாரணையில் அம்பலமானது. மோசடிக்கு துணையாக இருந்த கணவர் சதீஷையும் கைது செய்துள்ள போலீசார், இவர்களது வலையில் இன்னும் எத்தனை தொழிலதிபர்கள் சிக்கியுள்ளார்கள் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



