ஊட்டச்சத்துக்களின் சுரங்கமாக விளங்கும் முட்டையை, மருத்துவர்கள் சூப்பர் ஃபுட் என்று அழைக்கிறார்கள். அனைத்து வயதினருக்கும் ஏற்ற புரதம், வைட்டமின் டி, பி12 மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த உணவை அன்றாடம் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. ஆனால், இன்றைய அவசர உலகில் காலையில் வேகவைத்த முட்டையை மாலை உண்பதோ அல்லது அடுத்த நாள் வரை வைத்திருந்து பயன்படுத்துவதோ ஒரு பொதுவான பழக்கமாகிவிட்டது. அவ்வாறு வேகவைத்த முட்டைகளை எவ்வளவு காலம் சேமிக்கலாம், அவை எப்போது விஷமாக மாறக்கூடும் என்பது குறித்துப் பொதுமக்கள் அறிந்திருப்பது அவசியம்.
வேகவைத்த முட்டைகளை பொறுத்தவரை, அவற்றை சரியாக கையாண்டால் குளிர்சாதனப் பெட்டியில் 7 நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம் என உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், முட்டையின் முழுமையான சுவை மற்றும் சத்துக்களைப் பெற விரும்புவோர் 2 முதல் 3 நாட்களுக்குள் அதனைச் சாப்பிடுவது சிறந்தது. குறிப்பாக, முட்டையை வேகவைத்த பிறகு அதிக நேரம் சாதாரண வெப்பநிலையில் வெளியே வைத்திருப்பது மிகப்பெரிய தவறு. முட்டையை வேகவைத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளும் (வெப்பம் அதிகமாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்குள்), 4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலை கொண்ட குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட வேண்டும்.
முட்டைகளை பாதுகாப்பதில் அதன் ஓடு ஒரு இயற்கை கவசமாக செயல்படுகிறது. எனவே, முட்டைகளை உரித்து வைப்பதை விட, ஓடுகளுடனேயே குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது பாக்டீரியாத் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும். பலரும் செய்யும் மற்றொரு பொதுவான தவறு, முட்டைகளை ஃப்ரிட்ஜ் கதவின் ஓரத்தில் உள்ள தட்டுகளில் வைப்பதாகும். கதவை அடிக்கடி திறப்பதன் மூலம் ஏற்படும் வெப்பமாற்றம் முட்டையை விரைவாகக் கெட்டுப் போகச் செய்யும். அதற்குப் பதிலாக, காற்று புகாத ஒரு கொள்கலனில் வைத்து, குளிர்சாதனப் பெட்டியின் உள்பகுதியில் சேமிப்பதே முறையான வழியாகும்.
அதே நேரத்தில், கெட்டுப்போன முட்டைகளை அடையாளம் காண்பதில் கூடுதல் எச்சரிக்கை தேவை. முட்டையிலிருந்து ஒருவித அழுகிய வாசனையோ அல்லது கடுமையான துர்நாற்றமோ வீசினால், அதைச் சற்றும் யோசிக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். கெட்டுப்போன முட்டைகளை உண்பது கடுமையான ‘ஃபுட் பாய்சன்’ மற்றும் வயிற்று உபாதைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியம் தரும் முட்டையை முறையான பாதுகாப்பு முறைகளை கையாண்டு உட்கொள்வதே சிறந்தது.
Read More : 2030-இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா..? முதலீடு செய்தால் ஜாக்பாட் தான்..!!



