காலை காபி முதல் இரவு பால் வரை, பால் சார்ந்த பொருட்கள் நம் அன்றாட உணவின் தவிர்க்க முடியாத பகுதியாக உள்ளன. இருப்பினும், சமூக ஊடகங்களில் ஆரோக்கியமான உணவு குறித்து விவாதம் எழும்போது, பால் பொருட்கள் பெரும்பாலும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், தினமும் பால் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று புற்றுநோயியல் மருத்துவர் ஒருவர் பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது.
வைரலான அந்த வீடியோவில், “பசு, எருமை அல்லது ஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம், புற்றுநோய் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பன்னீர், பதப்படுத்தப்பட்ட சீஸ், தயிர் மற்றும் கிரீம் போன்றவற்றை தினமும் உட்கொள்வது பிரச்சனையை உருவாக்கலாம்” என்று அந்த மருத்துவர் கூறியிருந்தார். மேலும், வழக்கமான பால் பயன்பாட்டை புரோஸ்டேட் புற்றுநோயுடன் இணைக்கும் ஒரு ஆய்வையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நிபுணர்கள் மறுப்பு :
இந்த வைரல் வீடியோ குறித்து தானேயில் உள்ள KIMS மருத்துவமனையின் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் ஹிதேஷ் சிங்கவி, “இந்த தகவல் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள அறிவியல் தரவுகள், பால் பொருட்களுக்கும் புற்றுநோய்க்கும் இடையேயான நேரடி தொடர்பை இன்னும் நிரூபிக்கவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “சில ஆய்வுகள் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டாலும், தயிர் போன்ற புளித்த பால் பொருட்கள் பாதுகாப்பானவைதான். லாக்டோஸ் ஒவ்வாமை அல்லது குறைவான கொழுப்பு தேவைப்படும் நிலை இல்லாத பெரும்பாலான ஆரோக்கியமான பெரியவர்களுக்குப் பால் பொருட்கள் பாதுகாப்பானவையே.
பால் பொருட்களை முழுமையாக தவிர்ப்பதற்குப் பதிலாக, குறைந்த கொழுப்புள்ள பால், புளித்த தயிர் அல்லது கெஃபிர் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பது சமச்சீரான அணுகுமுறையாகும்” என்று ஆலோசனை வழங்கியுள்ளார். முகப்பரு, அரிக்கும் தோலழற்சி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டும் மருத்துவ ஆலோசனைப்படி பால் பொருட்களை உட்கொள்ளலாம். மற்றபடி, பால் நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Read More : ஃப்ரிட்ஜ் கூலிங் ஆகவில்லையா..? நீங்கள் தான் காரணம்..!! நிபுணர்கள் சொல்லும் ரகசிய பராமரிப்பு டிப்ஸ்..!!



