உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு 3,07,900-க்கும் மேற்பட்ட இறப்புச் சான்றிதழ்களை தயாரிக்க ரஷ்யாவின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போருக்கு முன்னர் இதுபோன்ற ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதைய கொள்முதல்களின் அளவு படையெடுப்புக்கு முந்தைய நிலைகளை விட மிக அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கு முன்பு, இறந்த வீரர்களின் உறவினர்களுக்கான சான்றிதழ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது. உக்ரைனில் சேவைக்கும் பிற மோதல்களுக்கும் இடையில் பதிவுகள் வேறுபாட்டைக் காட்டவில்லை. இருப்பினும் கொள்முதலில் ஏற்பட்ட அதிகரிப்பு ரஷ்யாவின் போரில் ஏற்பட்ட பாரிய இழப்புகளுடன் ஒத்துப்போகிறது. ரஷ்யா அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றாலும், சுயாதீன மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க இழப்புகளைக் குறிக்கின்றன.
இந்தாண்டு இதுவரை அமைச்சகம், 357,700 சான்றிதழ்களை ஆர்டர் செய்துள்ளது. 3,17,500 முன்னாள் படை வீரர்களுக்கும், 40,200 வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறப்புச் சான்றிதழை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, ஆர்டர்கள் 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன, 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, இறந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு 2,50,000-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும், போர் வீரர்களுக்கு 8,00,000 க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதற்கிடையே, உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று புலனாய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைனின் இராணுவம், மே 27 நிலவரப்படி படையெடுப்பிலிருந்து கொல்லப்பட்ட அல்லது தீவிரமாக காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை 9,82,840 எனக் காட்டுகிறது. இந்த புள்ளிவிவரங்களில் இறப்புகள் மட்டுமல்ல, காயம் காரணமாக போரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட துருப்புக்களும் அடங்கும்.