திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான பதவி வகித்து வருபவர் ஐ.பெரியசாமி. இவரின், திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் உள்ள வீடு மற்றும் சென்னையில் உள்ள வீடு, எம்எல்ஏ குடியிருப்பில் அவரது மகனின் அறை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 11 மணி நேரம் வரை நீடித்தது.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் திமுகவில் மாவட்ட செயலாளராகவும், பழனி எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். இவரது வீடு சீலப்பாடியில் உள்ள நிலையில், அங்கு 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை எதற்காக…?
கடந்த 2006 – 2011ஆம் ஆண்டு வரை வீட்டுவசதித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீட்டுமனைக்காக ஒதுக்கிய இடத்தில் வணிக வளாகம் கட்டியதாக புகார் எழுந்தது. இதற்கு ஜாபர் சேட்டின் மனைவிக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தனர்.
சோதனையில் சிக்கியது என்ன..?
அமலாக்கத்துறையினர் நடத்திய இந்த 11 மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, இந்த சோதனை நடைபெற்றபோது, தகவல் அறிந்து அமைச்சரின் வீடு முன்பு தொண்டர்கள் குவிந்தனர். மேலும் அதில் ஒருவர் ‘அமைச்சர் ஐ,பெரியசாமி வாழ்க’ என்று கூறியபடி, பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அவரை உடனே அங்கிருந்த போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. சோதனையின் முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கைகுலுக்கி சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தார்.
Read More : ஆவணி மாதத்தில் திருமணம், புதிய தொழில் தொடங்கலாமா..? சிறப்புகள் என்ன..? முக்கிய விரதங்கள் எப்போது..?