தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த அரசியல் யுத்தத்தில் பெரிய கூட்டணிகளை தாண்டி, குறிப்பிட்ட சமூக வாக்குகளைத் தீர்மானிக்கும் சிறிய அமைப்புகள் மற்றும் சமுதாயப் பேரவைகளின் ஆதரவை பெறுவதில் இரு கட்சிகளுமே மும்முரமாக களம் இறங்கியுள்ளன.
அந்த வகையில், தற்போதைய கள சூழலில் அதிமுக தனது செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமுதாய அமைப்புகளுடன் கைகோர்த்து வருகிறது. இதன் முக்கிய நகர்வாக, மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகம் எதிர்வரும் தேர்தலில் அதிமுகவிற்கு தனது முழுமையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் ஒருங்கிணைப்பில், மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ரமேஷ் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் சென்னை பசுமைவழி சாலையிலுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின் போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றுவோம் என்ற உறுதிமொழியுடன் கூடிய ஆதரவு கடிதத்தை எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் வழங்கினர். சமுதாய ரீதியான இத்தகைய ஆதரவுகள் தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க உதவும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Read More : இப்படி கூட உடல் எடையை குறைக்கலாமா..? தினமும் பயன்படுத்தும் இனிப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!!



