தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் செல்வாக்குமிக்க அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி களம் இறங்கியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இதுதொடர்பான சந்திப்பு நடைபெற்றது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தங்களது முழுமையான ஆதரவைத் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதில் தீவிரம் காட்டி வரும் சூழலில், பார்வர்டு பிளாக் கட்சியின் இந்த ஆதரவு அவருக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.வி. கதிரவன், “மக்களின் நாடித்துடிப்பை அறிந்து எடப்பாடியார் ஒரு மிகச்சிறந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார். அவர் அளித்துள்ள வாக்குறுதிகள் தமிழகத்தின் ஒவ்வொரு சாமானிய மனிதனையும் சென்றடையும் வகையில் உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை நிச்சயமாக அவரை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கும்” என்று தெரிவித்தார். அதிமுகவின் வாக்குறுதிகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக அமையும் என்றும் அவர் கூறினார்.



