இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடான், உலக அரங்கில் தனித்துவமான அரசுக் கொள்கைகளுக்காக அறியப்படுகிறது. இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இந்த சிறிய நாடு, தனது குடிமக்களுக்குக் கல்வி, மருத்துவம், வீடு மற்றும் மின்சாரம் என அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது. பூடானின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தும் அரசு, உலகின் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அளவுக்குச் சலுகைகளை அள்ளித் தெளிக்கிறது.
பூடானில் யாருமே பிச்சை எடுப்பதில்லை. அங்கு வீடற்றவர்களும் கிடையாது. சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு அந்நாட்டின் மன்னரே நிலம் வழங்கி, வீடு கட்டிக் கொடுக்கிறார். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தும் இலவசம். அது மட்டுமல்லாமல், உலகின் மிக உயரிய மருத்துவச் சிகிச்சைகள் கூட ஒரு பைசா செலவின்றி பூடான் அரசால் வழங்கப்படுகின்றன.
தேவைப்பட்டால், வெளிநாட்டிற்குச் சென்று சிகிச்சை எடுத்தாலும் அதற்கான முழுச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. மேலும், கிராமப்புற மக்களுக்கு மின்சாரம், விவசாயிகளுக்கு உரம், விதைகள் போன்றவையும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
பூடான் தனது கலாச்சாரத்தை பாதுகாக்க, மேற்கத்திய கலாசாரம் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, கடந்த 1999ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சிகளுக்கு கூட அங்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நாட்டு மக்களுக்குத் திகட்டத் திகட்ட சலுகைகளை அள்ளி வழங்கும் பூடான் அரசு, அவர்களின் வாழ்க்கைத் துணை குறித்த ஒரு பெரிய நிபந்தனையையும் விதித்துள்ளது.
பூடான் குடிமக்கள் வெளிநாட்டவரைத் திருமணம் செய்ய சட்டப்பூர்வ அனுமதி கிடையாது. இந்த விதி, மன்னர் குடும்பத்தினருக்கும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே விலக்கு அளிக்கிறது. தங்கள் தனித்துவமான கலாச்சாரத்தை தூய்மையாகவும், மரபாகவும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த நிபந்தனை நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.
புத்த மதத்தைப் பின்பற்றுவோர் அதிகம் உள்ள பூடானில், திருமணச் சடங்குகள் பல மணி நேரம் நீடிப்பது வழக்கம். திருமணத்திற்குப் பிறகு, கணவர் மனைவியின் வீட்டிற்குச் சென்று வசிப்பது, போதுமான பணம் சம்பாதித்த பிறகே தனிக் குடித்தனம் செல்வது போன்ற பல தனித்துவமான மரபுகளும் அங்குப் பின்பற்றப்படுகின்றன.



