கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை இரவுக்குள் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் உயிரிழந்தனர். தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி கரூர் காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், இணைச் செயலாளர் சி. டி. நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, புஸ்ஸி ஆனந்த் மற்றும் மதியழகன் இருவரும் தலைமறைவானதாக கூறப்பட்டது. இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை இரவுக்குள் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளது.



