பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பள்ளி குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம், பித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள முவானி நகரில் உள்ள பாலத்தில் 14 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பொலீரோ ஜீப் திடீரென நிலைக்குலைந்து ஆற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. உள்ளூர் கிராமவாசிகளின் உதவியுடன், மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு, காயமடைந்தவர்கள் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பொலேரோ ஜீப் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்ஜினில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு விபத்திற்கு காரணம் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த பித்தோராகர் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைப்பாங்கான மாவட்டம். இதன் பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் காலநிலை காஷ்மீரைப் போலவே இருப்பதால் இது ‘மினி காஷ்மீர்’ என்றும் அழைக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் சுற்றுலாப்பயணிகள் எனக் கூறப்படுகிறது. இறந்தவர்களை அடையாளம் காணும் பணியை நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், காயமடைந்த அனைவருக்கும் சரியான நேரத்தில், இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Read more: தவெக 2-வது மாநாடு பூமி பூஜை: ஒரே மேடையில் விநாயகர், மாதா, மெக்கா படங்கள்..!!