கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாகவும் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. மேலும், பீகாரில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியிலும் முறைகேடுகள் நடக்கின்றன எனவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அவர் பேசிய முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு..
* எங்களிடம் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என பாகுபாடு இல்லை. சட்டப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம் உருவாகின்றன. அப்படியிருக்க, ஒரு கட்சிக்கும் முன்னுரிமை அளிப்பது எப்படி சாத்தியம்?
* அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கையின்படியே வாக்காளர் பட்டியல் சீராய்வு நடைபெறுகிறது.
* பீகார் வாக்காளர் பட்டியல் தொடர்பாக பொய்கள் பரப்பப்படுகின்றன. அதற்காக 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 28,370 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளுக்கும் குறைகள் தெரிவிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது
* சிலர் மக்களிடம் அவதூறு பரப்பி, திசைதிருப்ப முயற்சி செய்கின்றனர். அது எங்களை பாதிக்காது. எங்களின் நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
* தேர்தல் ஆணையத்தின் கதவுகள் அனைவருக்கும் எப்போதும் சமமாகத் திறந்திருக்கும். தரை மட்டத்தில் வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், வாக்குச்சாவடி அலுவலர்கள் என அனைவரும் சேர்ந்து வெளிப்படையான முறையில் சரிபார்ப்பு செய்கின்றனர். வீடியோ சான்றுகளும் எடுக்கப்படுகின்றன.
*அடிப்படை உண்மைகளைப் புறக்கணித்து குழப்பம் பரப்பப்படுவது கவலைக்குரியது. ஒளிவுமறைவற்ற சூழலில் வாக்கு திருட்டுக்கு வாய்ப்பே இல்லை. எந்தக் கட்சியின் அழுத்தத்தாலும் அரசியலமைப்பின் கடமையில் இருந்து விலகமாட்டோம்.
* தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படும். வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் அரசமைப்பையே அவமதிக்கும் விதம் என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உறுதியாக தெரிவித்துள்ளார்.
Read more: மாதம் ரூ.5 ஆயிரம் சேமித்தால் ரூ.8.5 லட்சம் அள்ளலாம்.. போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..!