டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், தனது துணைவி மற்றும் Neuralink நிர்வாகி ஷிவோன் சிலிஸ்ள் பாதி இந்தியர் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்குப் பிறந்த மகன்களில் ஒருவரின் இடைப்பெயர் ‘சேகர்’ (Sekhar) என்று வைத்திருப்பதாகவும் கூறினார். இந்த பெயர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் பெயரிடம் இருந்து எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தகவலை அவர் Zerodha நிறுவனர் நிகில் காமத் நடத்தும் “WTF is?” என்ற பாட்காஸ்டில் பகிர்ந்தார். சுப்ரமணியன் சந்திரசேகர் ஒரு புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க விண்வெளி அறிவியலாளர். நட்சத்திரங்களின் அமைப்பு மற்றும் அவை எவ்வாறு உருவாகி மாறுகின்றன என்பதைக் குறித்து அவர் செய்த கோட்பாட்டு ஆய்வுகளுக்காக, 1983-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றார்.
ஷிவோன் சிலிஸின் இந்திய தொடர்பு
எலான் மஸ்க் இதுகுறித்து பேசிய போது ” ஷிவோன் சிலிஸ் இந்தியாவில் வாழ்ந்தாரா என்று கேட்ட போது, மஸ்க் அதற்கு இல்லை எனத் தெரிவித்தார். அவருடைய இந்திய தொடர்பு கலாச்சார ரீதியாக அல்ல, மரபு (ancestral) ரீதியாக மட்டுமே எலான் மஸ்க் கூறினார்.
மேலும் “ ஷிவோன் சிலிஸ் கனடாவில் வளர்ந்தார். சிறிய குழந்தையாக இருந்தபோது தத்தெடுக்கப்பட்டார். அவரின் தந்தை பல்கலைக்கழகத்தில் ஒரு எக்சேஞ்ச் மாணவராக இருந்ததாக நினைக்கிறேன்.. சரியான விவரங்கள் எனக்கு தெரியவில்லை, ஆனால் அவர் குழந்தையாக இருந்தபோது தத்தெடுக்கப்பட்டார், பின்னர் கனடாவில் தான் வளர்ந்தார்,” என்றும் கூறினார்.
ஷிவோன் சிலிஸ் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் பல வருட அனுபவம் பெற்ற நிபுணர் ஆவார். 2017ஆம் ஆண்டு Neuralink நிறுவனத்தில் சேர்ந்தார். தற்போது அந்த நிறுவனத்தில் Director of Operations and Special Projects பொறுப்பில் உள்ளார்.
இந்தியர்களை வேலைக்கு எடுத்தது அமெரிக்காவுக்கு பெரிய பயன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நெருக்கமான கூட்டாளியாக இருந்த எலான் மஸ்க், பல தசாப்தங்களாக திறமையான இந்தியர்களை வேலைக்கு எடுத்ததால் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் பயன் அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்து, தற்போது அமெரிக்காவில் H-1B விசா மற்றும் குடியேற்றக் கொள்கையைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு இடையே வெளியாகி உள்ளது..
இதுகுறித்து பேசிய எலான் மஸ்க் “ ட்ரம்ப் நிர்வாகத்தின் சில குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகள், H-1B விசா திட்டத்தின் தவறான பயன்படுத்தலால் உருவானவை. குறிப்பாக சில அவுட்சோர்சிங் நிறுவனங்கள் இந்த திட்டத்தை “கணக்கிட்டுத் தவறாக பயன்படுத்தியுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், அதற்காக H-1B விசா திட்டத்தை முழுமையாக நிறுத்தக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். மேலும் “H-1B திட்டத்தில் சிலர் உண்மையில் தவறாக பயன்படுத்தியுள்ளனர். சில அவுட்சோர்சிங் நிறுவனங்கள் முறையை சூழ்ச்சி செய்து பயன்படுத்தியுள்ளன; அதை நிறுத்த வேண்டும். ஆனால் H-1B திட்டத்தை மூட வேண்டும் என்ற கருத்தை நான் ஆதரிக்கவில்லை.” என்று எலான் மஸ்க் கூறியிருந்தார்..



