இன்று ஹரியானாவில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு, “ஆபரேஷன் சிந்தூர்” (Operation Sindoor) நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தவறான பிரச்சாரத்தை முறியடித்தார்..
பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் “இந்திய விமானி சிறையில் அடைக்கப்பட்டார்” என பொய்யாக கூறப்பட்ட விமானப்படை ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங் உடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.. அந்தப் புகைப்படம் இன்று பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டது. அதில் ஜனாதிபதி முர்மு, மே மாதத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட ஹரியானா விமானப்படை தளத்தில், ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங் உடன் நின்று கொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஊடகத்தின் தவறான கூற்றுகள்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டன. அவற்றில், சிவாங்கி சிங் இயக்கிய போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது, மேலும் அந்த விமானி பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார் என கூறப்பட்டது.
இந்த கூற்றை இந்திய ஊடகங்கள் உடனடியாக மறுத்தன. ஒரு முன்னாள் பாதுகாப்பு நிருபர், சிவாங்கி சிங்குடன் நேரடியாக பேசியதும், அவர் தன்னுடைய விமானத் தளத்தில் பணியில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், மத்திய தகவல் அலுவலகம் (PIB) வெளியிட்ட உண்மைச் சரிபார்ப்பு அறிக்கையும் இந்த வதந்திகளை முற்றிலும் பொய் என்பதை உறுதிப்படுத்தியது.
ஜனாதிபதியின் ரஃபேல் பறக்கும் அனுபவம்
ஜனாதிபதி முர்மு, இன்று ஹரியானா விமானப்படை தளத்தில் ரஃபேல் (Rafale) போர்விமானத்தில் பறந்தார்.. அதே தளத்தில் விமானப்படை தளபதி ஏ. பி. சிங் வேறு ஒரு ரஃபேல் விமானத்தில் பறந்தார்.
காலை 11.27 மணிக்கு விமானம் பறக்கும்முன், ஜனாதிபதி முர்மு விமானத்தின் உள்ளே இருந்து கைகளை அசைத்து வணக்கம் தெரிவித்தார். அதற்கு முன்னர், அவர் தளத்துக்கு வந்ததும் முழுமையான இராணுவ மரியாதையுடன் “கார்டு ஆஃப் ஆனர்” வழங்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ரஃபேல் பங்கு
ஏப்ரல் 22 அன்று பஹால்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இந்த நடவடிக்கையில் ரஃபேல் போர்விமானங்கள் முக்கிய பங்காற்றின. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பல பயங்கரவாத அடுக்குகள் அழிக்கப்பட்டன. இதன் பின்னர் நான்கு நாட்கள் கடும் மோதல்கள் நடந்தன, இறுதியில் மே 10 அன்று இரு தரப்பும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டன.
வரலாற்றில் முதல் முறை
ஜனாதிபதி முர்மு, இந்திய விமானப்படையின் இரண்டு விதமான போர்விமானங்களில் பறந்த முதல் இந்திய ஜனாதிபதி ஆனார்.
முன்னதாக, 2023 ஏப்ரல் மாதத்தில் அவர் அசாம் மாநிலம் தேஸ்பூர் விமானப்படை தளத்தில் சுகோய்-30 எம்கேஐ (Sukhoi-30 MKI) போர்விமானத்தில் பறந்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம் (ஜூன் 8, 2006) மற்றும் பிரதிபா பாடில் (நவம்பர் 25, 2009) ஆகியோரும் சுகோய்-30 எம்கேஐ போர்விமானங்களில் புனே அருகே உள்ள லோஹேகான் விமானத் தளத்தில் பறந்திருந்தனர்.
ரஃபேல் போர்விமானங்கள்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் (Dassault Aviation) நிறுவனம் தயாரித்த ரஃபேல் போர்விமானங்கள், 2020 செப்டம்பரில் அம்பாலா விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன. முதல் ஐந்து ரஃபேல் விமானங்கள் 2020 ஜூலை 27 அன்று பிரான்ஸிலிருந்து இந்தியா வந்தன. அவை 17வது படையணியான “கோல்டன் அரோஸ்” (Golden Arrows) படையில் இணைக்கப்பட்டன. இந்த ரஃபேல் விமானங்களே தற்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : ஆதார் பிறந்த தேதி அல்லது குடியுரிமைக்கான சான்றா? மத்திய அரசு விளக்கம்!



