புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள குறுங்கலூர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (23) என்ற சமோசா தயாரிப்பு நிறுவன ஊழியர் ஒருவர், தனது காதலியின் துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரிதும் படிக்காத காளிதாஸ், கடந்த 3 வருடங்களாக சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து, சந்தைகளில் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார். அரிமளம் சந்தையில் அவர் கடை போட்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த உஷா (20) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கம் போல 2 நாட்களுக்கு முன்பு இருவரும் கொத்தமங்கலம் வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காளிதாஸ், அங்கிருந்த ஒரு மரத்தில், உஷாவின் துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், காளிதாஸின் உடலை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரிடம் காதலி உஷா அளித்த வாக்குமூலத்தில், “நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது சண்டை வந்தது. அப்போது அவர் என்னை அடித்துவிட்டார். நான் மயங்கி கீழே விழுந்து விட்டேன். மயக்கம் தெளிந்து பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து இறந்து கிடந்தது தெரிய வந்தது” என்று கூறியுள்ளார்.
ஆனால், இதை ஏற்க மறுத்த காளிதாஸின் குடும்பத்தினர், உஷா எப்போதும் போன் பேச சொல்லி காளிதாஸைத் தொந்தரவு செய்து வந்ததாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும், உஷாதான் ஏதோ செய்துள்ளார் என்றும் கூறி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



