மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் சமீபத்தில் அவர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது ஆம்புலன்ஸ் குறுக்கே வந்ததால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த முறை ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக செல்வார் என எச்சரித்திருந்தார்.. அவரின் இந்த கருத்து திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்..
இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்டம் துறையூரில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அப்போது அந்த கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் வந்ததால், அதில் நோயாளி இருக்கிறாரா என அதிமுகவினர் பரிசோதித்தனர். ஆனால் நோயாளி இல்லை என்றதும், வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பினார்.. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..
அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்ததாக போன் கால் வந்ததால் அங்கு ஆம்புலன்ஸ் சென்றதாக கூறப்படுகிறது.. அவசர அழைப்பின் பேரில் அங்கு ஆம்புலன்ஸ் செல்ல, அதிமுக நிர்வாகி ஆம்புலன்ஸை நிறுத்தி தகராறு செய்துள்ளார். ஆம்புலன்ஸ் ட்ரைவர் செந்திலை தாக்கி, சாவியை பிடுங்கி தூக்கி எரிந்து அந்த நிர்வாகி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.. மேலும் ஆம்புலன்ஸில் உதவியாளராக இருந்த கர்ப்பிணியையும் அதிமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது.. இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பெண் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இந்த நிலையில் எம்.எல்.ஏவும், திமுக மருத்துவ அணி செயலாளருமான எழிலன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ நேற்று எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஆம்புலன்ஸ் சென்றதால் ஆம்புலன்ஸ் ட்ரைவர், உதவியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. இதில் உதவியாளர் ஹேமலதா 7 மாத கர்ப்பிணி..
அவசர உதவிக்கு ஆம்புலன்ஸை அழைத்த போன் கால் பதிவு உள்ளது.. பாதிக்கப்பட்ட நபருக்கு இதய பாதிப்பு இருந்திருந்தால், உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்.. அதற்கு யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்?
ஆம்புலன்ஸ் சைரன் கேட்டாலே வழிவிடுவது தான் நமது அடிப்படை பண்பு.. நிறைய கூட்டங்கள் நடக்கும் போது ஆம்புலன்ஸ் வரும் போது அதற்கு வழிவிடுவது தான் தமிழகத்தில் அனைத்து சமூக இயக்கங்களும் பின்பற்றும் மாண்பு.. ஆனால் முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், ஒரு பிரதான எதிர்க்கட்சியை நடத்தும் நபர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுவது எந்த விதத்தில் நியாயம்.?. ஒருவேளை ஆம்புலன்ஸ் டிரைவரை நோயாளியாக மாற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்லாமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.. எதிர்க்கட்சி தலைவர் சொல்லும் ஒரு கருத்து எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இது உதாரணம்.. இது ஒரு தவறான முன்னுதுராணமாக இருக்கக்கூடாது…” என்று தெரிவித்தார்..