மறைந்த பாலியல் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஃபைலஸ் சமீபத்தில் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. அந்த ஆவணங்களில் உலகின் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர்.. ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணையில் இருந்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது..
இந்த நிலையில் எப்ஸ்டீன் பற்றிய மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அவர் மனிதர்களின் “ஆகச்சிறந்த இனம்” (Super-race) ஒன்றை உருவாக்கும் நோக்கில் மரபணு மாற்றம் (Genetic Engineering) சார்ந்த திட்டங்களை கொண்டிருந்ததாக, தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட முக்கிய விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த திட்டத்தின் மையமாக, அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ள “ஸோரோ ராஞ்ச்” (Zorro Ranch) என்ற அவரது தனியார் நிலத்தை பயன்படுத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது. சுமார் 20 பெண்களை பயன்படுத்தி, அவர்கள் மூலம் தனது குழந்தைகளைப் பெற்றெடுத்து, ஒரு பெரிய அளவிலான “இனப் பெருக்க திட்டத்தை” (Breeding Programme) உருவாக்க வேண்டும் என்பதே எப்ஸ்டீனின் எண்ணமாக இருந்தது.
“டிரான்ஸ்ஹ்யூமனிசம்” என்ற பெயரில் யூஜெனிக்ஸ்?
2019 ஆம் ஆண்டு வெளியான அந்த அறிக்கையின்படி, எப்ஸ்டீன் பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இந்த எண்ணங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் இதை “டிரான்ஸ்ஹ்யூமனிசம்” (Transhumanism) என அழைத்தார்.
ஆனால் விமர்சகர்கள், இது உண்மையில் யூஜெனிக்ஸ் (Eugenics) எனப்படும் பழைய சிந்தனையின் நவீன வடிவமே என்று குற்றம்சாட்டினர்.
யூஜெனிக்ஸ் என்பது, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான ஒரு கொள்கை. தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்தின் மூலம் மனித இனத்தை மேம்படுத்தலாம் என்ற தவறான கருத்தை இது முன்வைத்தது. இந்த கொள்கை பின்னர் நாசி ஆட்சியால் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்பது வரலாற்று உண்மை.
2000களில் தொடங்கிய திட்டம்
எப்ஸ்டீன், 2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே இந்த “சூப்பர் மனித இனம்” பற்றிய கருத்துகளைப் பற்றி பேசத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
2008 ஆம் ஆண்டு பாலியல் கடத்தல் குற்றத்தில் தண்டனை பெற்ற பிறகு, தனது நியூ மெக்ஸிகோவில் உள்ள ஸோரோ ராஞ்சை, இந்த திட்டத்தின் முக்கிய மையமாக மாற்ற வேண்டும் என்பதில் அவர் மேலும் வெளிப்படையாக இருந்தார்.
அதே ஸோரோ ராஞ்ச் தான், சிறுமிகள் உட்பட பல இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களில் ஒன்றாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி விஞ்ஞானிகள் கலந்து கொண்ட சந்திப்புகள்
எப்ஸ்டீன், பல முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் அறிவுஜீவிகளை அழைத்து, விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தினார்.
அவற்றில் கலந்து கொண்டவர்களாகக் கூறப்படுவோர்:
புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்
மரபணு பொறியாளர் ஜார்ஜ் சர்ச்
கோட்பாட்டு இயற்பியலாளர்கள் மர்ரே கெல்-மேன், பிராங்க் வில்செக்
நரம்பியல் மருத்துவர் ஒலிவர் சாக்ஸ்
பரிணாம உயிரியல் அறிஞர் ஸ்டீபன் ஜே கூல்ட்
மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் “பரிணாம இயக்கவியல் திட்டம்” திட்டத்திற்கு எப்ஸ்டீன் 6.5 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார். அதேபோல், “உலகளாவிய மனிதநேய மேம்பாட்டு சங்கம் ” (தற்போது Humanity Plus) அமைப்பிற்கும் 20,000 டாலர் வழங்கினார்.
அறிவியல் உலகின் கடும் விமர்சனம்
எப்ஸ்டீன் அறிவுசார் வட்டாரங்களில் இடம் பெற முயன்றாலும், அவரது கருத்துகளை பலர் முழுமையாக நிராகரித்தனர். அறிவாற்றல் விஞ்ஞானி ஸ்டீவன் பிங்கர், எப்ஸ்டீனை “அறிவுசார் மோசடிக்காரர்” என விமர்சித்தார். தொழில்நுட்ப நிபுணர் ஜேரான் லேனியர், எப்ஸ்டீனின் கருத்துகள் சோதிக்கக்கூடிய அறிவியல் கோட்பாடுகளாகவே இல்லை என்று கூறினார்.
எப்ஸ்டீனை 2008 ஆம் ஆண்டு வழக்கில் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் ஆலன் டெர்ஷோவிட்ஸ், இந்த யூஜெனிக்ஸ் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.. மேலும், “பல விஞ்ஞானிகள் அவரது கருத்துகளைவிட, அவர் வழங்கிய பணத்தில்தான் அதிக ஆர்வம் காட்டினார்களா?” என்ற சந்தேகமும் அப்போது எழுந்ததாக அவர் கூறினார்.
Read More : நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த ஈரான்..! என்ன காரணம்?



