நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமே பெட்ரோல் விலை தான். ஆரம்பத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்துகள் நடந்த சம்பவங்கள் சிலரின் அச்சத்தை ஏற்படுத்தினாலும், நிறுவனங்கள் இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்து தொடர்ந்து விற்பனையை மேம்படுத்தி வருகின்றன.
மின்சார வாகனங்களுக்கு அவ்வப்போது சார்ஜ் செய்வது அத்தியாவசியத் தேவை என்பதால், வீட்டிலேயே இருசக்கர வாகனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இருப்பினும், மின்சார கார் மற்றும் ஆட்டோ போன்ற பெரிய வாகனங்களுக்கு பொதுவான இடங்களில் சார்ஜ் நிலையங்கள் அமைப்பது அவசியமாகிறது.
இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பொதுவெளியில் சார்ஜ் நிலையங்களை அமைப்பதற்கு மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சகம் தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதுடன், கவர்ச்சிகரமான மானியத் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
பிரதம மந்திரியின் இ-டிரைவ் (PM E-Drive) திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 72,300 சார்ஜிங் மையங்களை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அரசு கட்டிடங்கள், போக்குவரத்து மையங்கள், நெடுஞ்சாலைகள், மற்றும் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் சார்ஜ் நிலையங்கள் அமைக்க மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் சார்ஜ் மையங்களை அமைத்து, அதனைப் பொதுப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் நபர்களுக்கு 100% மானியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், நகராட்சி வாகன நிறுத்துமிடங்கள், எண்ணெய் நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள், மற்றும் மத்திய/மாநில சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் சார்ஜ் மையங்கள் அமைப்போருக்கு 80% மானியம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த மானியம் 2 தவணைகளில் விடுவிக்கப்பட உள்ளது. முதல் தவணை, சார்ஜ் மையங்களின் கட்டமைப்புப் பணிகள் நடைபெறும் போதும், இறுதித் தவணை பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து மையம் பொதுப் பயன்பாட்டிற்கு வரும்போதும் வழங்கப்படும். பெட்ரோல் செலவில் இருந்து விடுதலை பெறுவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில், மத்திய அரசின் இந்த மானிய அறிவிப்பு, சார்ஜ் மையங்களை அமைக்க முன்வருபவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
Read More : ஆயுத பூஜை முதலில் உருவானது எப்படி..? வழிபட வேண்டிய வழிமுறை..!! உகந்த நேரம் எது..?