நெல்லை மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே உக்கிரமன்னன் கோட்டை பகுதியைச் சேர்ந்த 54 வயது மிலன்சிங் என்ற மாற்றுத்திறனாளி ஏற்கனவே 3 திருமணங்கள் செய்த நிலையில், அவர்களை பிரிந்து ஜீவிதா என்பவரை 4-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், மலையன்குளத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுடன் மிலன்சிங்கிற்கு நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண் திடீரென மாயமானார். இந்நிலையில், அவரது பெற்றோர் குருவிகுளம் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போனதாக புகார் அளித்தனர்.
இதற்கிடையே, தருமபுரி – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையின் ஓரத்தில் 2016-ஆம் ஆண்டு ஒரு பெண் சடலம் காணப்பட்டது. சடலம் அரைகுறையாக எரிந்த நிலையில், காவேரிப்பட்டிணம் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதலில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்த அந்தச் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, மிலன்சிங்குக்கு இந்த வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது. அந்தப் பெண்ணை ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி, தருமபுரி அருகே உள்ள வெண்ணம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வைத்திருந்ததும், அந்த இடத்தில் அவரை அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
பின்னர், அந்தப் பெண்ணை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து, அவரது சடலத்தை நெடுஞ்சாலை ஓரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் அம்பலமானது. இந்த கொலை வழக்கில் மிலன்சிங்கின் 4-வது மனைவி ஜீவிதாவுக்கும் தொடர்பு இருந்த நிலையில், அவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு முதலில் இருவேறு பகுதிகளில் நடைபெற்றாலும், இரண்டையும் இணைத்து, சிறப்பு விசாரணை அமைப்பான CBI-க்கு மாற்றப்பட்டது.
வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த நீதிபதி சுதா, குற்றவாளி மிலன்சிங்கும், ஜீவிதாவுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.